ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப் பட்டன. அதில், 'வெளிநாட்டு குளிர்பானங்கள் உடலுக்கு கேடு; அவற்றை அருந்துவது தவிர்க்க வேண்டும்' என்பது முக்கியமாக முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கூட்டமைப்பினர், 'வெளிநாட்டு குளிர்பானங்களை மார்ச் 1-ம்தேதி முதல் விற்பனை செய்யமாட்டோம்' என அறிவித்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மார்ச் முதல் தேதி முதல் அங்குமிங்குமாக சில கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது கோடைகாலம் துவங்கிய நிலையில், வெளிநாட்டு குளிர்பானங்களை கடைக்காரர் கள் குறைவான அளவே கொள்முதல் செய்கின்றனர்.
இதுபற்றி விருத்தாசலம் பாலக் கரை அருகே குளிர்பானக் கடை நடத்திவரும் பரமேஸ்வரி என்பவர் கூறும்போது, ''நான் கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் பழச்சாறு கடை நடத்தி வருகிறேன். விற்பனை சுமாராகத்தான் இருக் கும். இந்த வருடம் கோடை துவக்கத்திலேயே பழச்சாறு விற்பனையும் சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது. உள்ளூர் உற்பத்தி குளிர்பானங் களை விரும்பி கேட்கின்றனர்.'' என்றார்.
விருத்தாசலம் பேருந்து நிலையம் எதிரே குளிர்பான கடை நடத்திவரும் குளிர்பானக் கடை உரிமையாளர் சாஸா கூறும் போது, ''பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டு குளிர்பானங்களை பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை. மாறாக உள்ளூர் பானங்களை கேட்கின்றனர். இருப்பினும் எங்களிடம் ஃப்ரிட்ஜ் வசதி இல்லாததால், வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் வழங்கியிருக்கும் ஃப்ரிட்ஜை பயன்படுத்துவதால், அவர்களது தயாரிப்புப் பொருட்களை வாங்கி வைக்க வேண்டியிருக்கிறது. அவை தேக்கமடைந்து வருகின்றன'' என்கிறார்.
கடந்த 20 வருடங்களாக உள்ளூர் உற்பத்தி குளிர்பானங் களான ரஸ்னா, மோர், பாதாம் பால், ஜிகர்தண்டா, ரோஸ்மில்க், ஃப்ரூட் மிக்ஸர் உள்ளிட்ட பழச்சாறு வகைகளை விற்பனை செய்துவரும் விருத்தாசலம் கலைமணி கூறும்போது, ''நான் வெளிநாட்டு குளிர்பானங்ளை பெரும்பாலும் விற்பது கிடையாது. பழச்சாறுகளை பயன்படுத்தி குளிர்பானங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இந்தாண்டு துவக்கமே நல்ல மாதிரி இருக்கிறது. பழச்சாறு வகைகளை சொல்லிக் கேட்கின்றனர்'' என்றார்.
விருத்தாசலம் பாலக்கரை அருகே ஒரு கடையில் பழச்சாறு பருகுகிறார் வாடிக்கையாளர் ஒருவர்.
விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் எலுமிச்சை ஜூஸ் அருந்திய சிதம்பரத்தைச் சேர்ந்த பயணி வெற்றிவேலிடம் கேட்டபோது, ''கோடைக்கு இதுதான் தாகம் தணிக்கும். உள்ளூர் உற்பத்தி குளிர்பானங் களை அதிகமாக கடைகளில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உள்நாட்டு தயாரிப்புப் பொருட்களை வாங்கவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் வந்திருப்பது வரவேற்கத்தக்கது'' என்றார்.
விருத்தாசலத்தில் வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்பனை செய்யும் ஏரியா முகவர் சுரேஷின் உதவியாளர் மணிகண்டனிடம் கேட்டபோது, ''சுமாராகத்தான் விற்பனையாகிறது. ஆனாலும் டாஸ்மாக் கடையை ஒட்டியுள்ள பெட்டிக் கடை மற்றும் பார்களில் விற்பனை குறையவில்லை'' என்றார்.
வெளிநாட்டு குளிர்பானங்கள் மொத்த விநியோகஸ்தர் ரமேஷிடம் கேட்டபோது, ''கடந்தாண்டு கோடை மாத துவக்கத்தை ஒப்பிடுகையில் தற்போது 10 சதவிகித வியாபாரம்தான் நடந்திருக்கிறது. முதலீட்டுக்குத் தகுந்த வருவாய் இல்லை'' என்றார்.
தரமானதை தாருங்கள்
''வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் பரவலாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இப்போது உள்ளூர் குளிர்பானங்களுக்கு மவுசு கூடியிருக்கிறது. இது நல்ல விஷயம்தான். ஆனால் உள்நாட்டு குளிர்பானங்களிலும் உடல்நலனை கெடுக்கும் சில விஷயங்கள் சேர்க்கப்படுகின்றன. உள்ளூர் உற்பத்தியாளர்கள் அதைக் கருத்தில் கொண்டு தரமானதையே உற்பத்தி செய்ய வேண்டும்'' என்று கூறுகிறார் சிதம்பரத்தில் வசிக்கும் அனைந்திந்திய மாதர் சங்க மாநிலத் தலைவர் ஜான்ஸி ராணி
70 சதவீத விற்பனை குறைந்தது
வெளிநாட்டு குளிர்பான விற்பனை தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையனிடம் கேட்டபோது, ''தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை 70 சதவிகிதம் குறைந்துள்ளது. தற்போது கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் ஏற்கெனவே வாங்கப்பட்டவை. அவைகளையும் மக்கள் வாங்க மறுக்கின்றனர். இந்த சூழலில் உள்நாட்டு குளிர்பான உற்பத்தியாளர்கள், சில்லரை விற்பனையாளர்களின் தேவைக்கேற்ப சில வசதிகளை அரசு செய்து தர வேண்டும்'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago