நவ.12-ல் முழு அடைப்புப் போராட்டம்: வைகோ வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி, இம்மாதம் 12 ஆம் தேதி, தமிழகத்தில் நடைபெறவுள்ள கடை அடைப்புக்கும், முழு அடைப்புக்கும் தமிழக மக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தீவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று ஒரு கருத்து உண்மையான உணர்வாளர்களாலும், 2008-2009 இல் ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அப்போது அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளாலும் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழர்களின் நெஞ்சில் தணலாகிவிட்ட இந்தப் பிரச்சினையில், தமிழர்கள் செல்ல வேண்டிய இலக்கை திசை மாற்றவும், வீரத் தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட மானத்தமிழர்கள் உயிர்கொடுத்து உருவாக்கிய உணர்ச்சியை நீர்த்துப்போகச் செய்யவும் சிலர் திட்டமிட்டும், பலர் பிரச்சினையின் ஆழத்தை உணராமலும் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.

காமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் ஏற்பாடு செய்ததே சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகமாக தற்போது பதவியில் இருக்கும் கமலேஷ் சர்மா என்ற இந்தியரைக் கொண்டுதான் இம்மாநாட்டை நயவஞ்சக நோக்கத்தோடு இந்திய அரசு கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்தது.

இந்த மாநாடு எந்த நாட்டில் நடக்கிறதோ, அந்த நாட்டின் அதிபர்தான் அதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக செயல்படுவார். இலங்கையில் மாநாட்டை நடத்திவிட்டால் தமிழ் இனப்படுகொலை குற்றவாளியான ராஜபக்சேவை, இனக்கொலை குற்றத்திற்கான அனைத்துலக நீதிமன்ற விசாரணை என்ற கூண்டுக்குள் சிக்க விடாமல் தப்ப வைத்துவிடலாம் என்பதுதான் இந்திய அரசின் திட்டமாகும். இந்த இனப்படுகொலையில் கூட்டுக்குற்றவாளிதான் இந்திய அரசு ஆகும்.

லட்சக் கணக்கான தமிழர்கள் படுகொலைக்கும், இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாளியாகும். நான் நெஞ்சால் போற்றும் பிரபாகரனின் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை யுத்த களத்தில் சிங்களவன் ஒருபோதும் வென்றிருக்க முடியாது.

இந்திய அரசின் முப்படைத் தளபதிகளும் சிங்கள அரசுக்கு வகுத்துக் கொடுத்த திட்டங்களும், நேரிடையாகவே செய்த பல உதவிகளும், அள்ளிக் கொடுத்த ஆயுதங்களும், மேலும் 6 அணு ஆயுத வல்லரசுகளிடம் ராஜபக்சே ஆயுதங்கள் வாங்குவதற்கு இந்தியா செய்த பண உதவியும்தான் விடுதலைப் புலிகள் போரில் தோற்கக் காரணமாயிற்று. எனவே, இனப்படுகொலை குறித்த நீதி விசாரணை நடைபெறுமானால், இந்திய அரசும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியது வரும்.

தமிழகத்தில் இளம் தலைமுறையினரிடம், குறிப்பாக மாணவர்களிடம் ஏற்பட்டு வரும் தமிழ் ஈழ ஆதரவு உணர்ச்சிக் கனல் இந்திய அரசுக்கு எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால்தான் காமன்வெல்த் மாநாட்டை இந்திய-இலங்கை அரசுகள் நடத்த முற்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கலை எதிர்த்து நெல்சன் மண்டேலாவைப் போல் போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான அருட் தந்தை டெஸ்மண்ட் டுட்டு, "இலங்கையில் உத்தேசிக்கப்பட்டுள்ள காமன்வெல்த் மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகள் அனைத்தும் பங்கேற்காமல் புறக்கணித்தால் தமிழர்களுக்கான நீதியின் வெளிச்சம் கிடைக்கும்" என்று தனது இரண்டு யோசனைகளில் ஒரு யோசனையாகக் கூறி உள்ளார்.

இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாமல் இருப்பதாலோ அல்லது இந்தியாவிலிருந்து எந்தப் பிரதிநிதியும் பங்கேற்காமல் தவிர்ப்பதாலோ தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப்போவது இல்லை. காமன்வெல்த் அமைப்பு அதிபர் கிரீடம் கொலைகார ராஜபக்சேவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு சூட்டப்பட்டு விடும். எனவே, "காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு, மாநாட்டை நடத்தாதே" என்ற கோரிக்கையும் முழக்கமும்தான் ஈழத் தமிழர் விடியல் என்ற இலக்குக்கு வழிகாட்டுவதாக அமையும்.

இனிமேல் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தவிடாமல் செய்ய வாய்ப்பு இல்லை. இந்திய அரசின் சதித்திட்டம் நிறைவேறிவிடும். இதனால் மானத்தமிழர்கள் மனம் சோர்வடையத் தேவை இல்லை. உலகம் காமன்வெல்த் அமைப்போடு சுருங்கிவிடவில்லை. காமன்வெல்த்தின் குறிக்கோளும், ஈழத் தமிழர்களின் புதைகுழியில் சேர்ந்தே புதைக்கப்பட்டுவிடும்.

உலகில் 65 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறோம். நமது இனத்தை படுகொலைக்கு ஆளாக்கிய சிங்களவனின் கொடுமைகளை நிரூபிக்க நம்மிடம் அசைக்க முடியாத சாட்சியங்களும், ஆவணங்களும் உள்ளன.

ஈழத் தமிழர் தாயகத்திலிருந்து சிங்களக் காடையர் கூட்டத்தை வெளியேற்றவும், சிங்கள இராணுவம், போலிசை முற்றாக அப்புறப்படுத்தவும், சிறையில் வாடும் நம் சகோதர சகோதரிகளை விடுவிக்கவும், வீரத் திலகம் பிரபாகரன் கட்டி எழுப்பிய சுதந்திர தமிழ் ஈழத்தின் விடியல் கொடி விண் முட்டப் பறக்கவும், நாம் சபதம் ஏற்போம்.

இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து அம்பலப்படுத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் சகோதரர் வெள்ளையன் தமிழகமெங்கும் நவம்பர் 12 ஆம் தேதி முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதை வரவேற்று ஆதரிக்கிறேன்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நவம்பர் 7 ஆம் தேதி நடத்திய பல்வேறு கட்சியினர் பங்கேற்ற கூட்டத்தில், நவம்பர் 12 ஆம் தேதி தமிழகத்தில் ரயில் மறியல் நடத்துவது என்றும்; முழு அடைப்பு நடத்துவது என்றும் எடுக்கப்பட்ட முடிவை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்று ஆதரிக்கிறது.

தாய்த் தமிழகத்திலே வாழும் மனிதாபிமானமுள்ள மக்கள் அனைவரையும் பணிவோடு வேண்டுகிறேன். நவம்பர் 12 ஆம் தேதி அன்று ஏற்படும் பொருள் நட்டத்தையும், சிரமத்தையும் பொருட்படுத்தாது கடைகளை அடைக்குமாறு வேண்டுகிறேன். முழு அடைப்பை வெற்றிபெறச் செய்யும் வகையில், அன்று வாகனங்களைச் சாலைகளில் இயக்க வேண்டாம் என வேண்டுகிறேன். 12 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து ரயில் தடங்களிலும் இரயில் மறியல் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும் அடக்குமுறையை எதிர்த்து முன்வர வேண்டுகிறேன்.

தவிர்க்க இயலாது மருத்துவமனைகளுக்குச் செல்வோரும், திருமணம், ஈமச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்வோரும் வாகனங்களைப் பயன்படுத்தி பிரயாணம் செய்யலாம்.

ஈழத் தமிழர்கள் சிந்திய இரத்தத் துளிகளின் பெயரால் வேண்டுகிறேன். முத்துக்குமார் உள்ளிட்டோர் மேனியைத் தழுவிய மரண நெருப்பின் பெயரால் வேண்டுகிறேன். 'நவம்பர் 12 ஆம் தேதி, தாய்த் தமிழகம் தனது தொப்புள் கொடி உறவுகளுக்காக வேதனையில் உறைந்தது, அறவழியில் தமிழர்கள் தங்கள் வேதனையை ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை உலகத்துக்கு பிரகடனம் செய்தனர்' என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் முழு அடைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டுமாறு தாய்த் தமிழகத்து மக்களை அவர்களின் ஊழியன் என்ற முறையில் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்