காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றால் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கலாம்: சுதர்சன நாச்சியப்பன்
சென்னையில் சனிக்கிழமை நடந்த இந்திய தொழிலகக் கூட்டமைப்பு கருத்தரங்கில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கலந்துகொண்டார்.
அதன்பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன்மூலம் இந்தியாவுக்கும், இலங்கையின் வடக்கு மாகாண பகுதிக்கும் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வர முடியும். இந்தியாவிலும் இலங்கையிலும் முதலீடு செய்ய ஐரோப்பிய நாடுகள் ஆர்வம் காட்டுவதில்லை.
அதனால், அதுபோன்ற வெளிநாடுகளின் முதலீட்டை ஈர்க்க வேண்டிய பொறுப்பு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், இலங்கை வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விக்னேஷ்வரனுக்கும் இருக்கிறது. இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
முன்னதாக, தமிழக மக்களின் ஒருமித்த கருத்துக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். இந்தியப் பிரதிநிதிகள் யாரும் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது. இதுபற்றிய முடிவினை உடனடியாக இலங்கைக்குத் தெரிவிக்க வேண்டும். காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.