டிச.7-ல் இந்திய தேசிய கொடியை உருவாக்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

சென்னை ரோட்டரி மாவட்ட (3230) ஆளுநர் நாசர் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் தேசிய கொடிநாள் டிசம்பர் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி சென்னை ரோட்டரி மாவட்டம் சார்பில் ‘எனது இந்தியா; எனது கொடி’ என்ற தலைப்பில் 50 ஆயிரம் பேரைக் கொண்டு இந்திய தேசிய கொடியை உருவாக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 16 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

இந்த கொடியை உருவாக்கும் நிகழ்ச்சி, அன்று காலை 7 மணிக்கு தொடங்கி 8.30 மணிக்கு முடியும். பின்னர் தேசிய கொடி நிலை 15 நிமிடங்கள் நீடிக்கும். இதில் பங்குபெற விரும்புவோர் www.rotarymyflagmyindia.com என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துக் கொள்ளலாம். இக்கொடி, 480 அடி நீளமும், 320 அடி அகலமும் கொண்டது. இதை கண் காணிக்க கின்னஸ் நிறுவன பிரதி நிதிகள் நேரில் வருகின்றனர்.

இதற்கு முன்பு 29,300 பேரைக் கொண்டு பாகிஸ்தான் தேசிய கொடி உருவாக்கப்பட்டது. பின்னர் நேபாள நாட்டினர் 36,300 பேரைக் கொண்டு அந்நாட்டு தேசிய கொடியை உருவாக்கினர். இச் சாதனையை முறியடிக்கும் விதமாக எங்கள் முயற்சி அமையும். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள திரை மற்றும் இசை பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE