குளிர்கால கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 4-ல் கூடுகிறது: முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. இதில் முல்லை பெரியாறு விவகாரம், காவிரி ஆற்றில் கர்நாடகம் அணை கட்டும் திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கி முதல்கட்டமாக ஐந்து நாட்கள் நடந்தன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2-ம் கட்டமாக ஜூலை 10-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை பேரவைக் கூட்டம் நடந்தது. இதில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை யடுத்து, முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக கடந்த செப்டம்பர் 29-ல் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற் றார். அவர் தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.

இந்த சூழ்நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே 2 அணைகள் கட்டப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது. அதேபோல, முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று அரசுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவந்தன. இதற்கு பதிலளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘பேரவையை எப்போது கூட்ட வேண்டும் என எங்களுக்குத் தெரியும். அதுபற்றி யாரும் ஆலோசனை சொல்ல வேண்டாம்’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் டிசம்பர் 4-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என்று ஆளுநர் ரோசய்யா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த குளிர்கால கூட்டத் தொடர் சுமார் ஒரு வாரம் வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 4-ம் தேதி பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவுசெய்யும்.

தற்போதைய அதிமுக ஆட்சியில், 2011-ம் ஆண்டு பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 15-ம் தேதி ஒருநாள் மட்டுமே நடந்துள்ளது. 2012-ல் ஐந்து நாட்களும், 2013-ல் 6 நாட்களும் குளிர்கால கூட்டத் தொடர்கள் நடந்துள்ளன.

பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரில் ஆவின் பால் விலை, மின் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும், காவிரி ஆற்றில் கர்நாடகம் அணை கட்ட முயற்சிப்பது, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்துள்ள வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளும் பேரவையில் எதிரொலிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கூட்டத் தொடரை குறைந்தது ஒரு வாரமாவது நடத்த வேண்டும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பும் என்று தெரிகிறது.

முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் பேரவைக் கூட்டம் இதுவாகும். ஏற்கெனவே, 2001 செப்டம்பர் முதல் சுமார் 6 மாதம் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்துள்ளார். ஆனால், அப்போது பேரவைக் கூட்டம் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் முதல் வாரத்தில் சட்டப் பேரவையைக் கூட்டுவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக, கடந்த 22-ம் தேதி ‘தி இந்து’வில் விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், டிசம்பர் 4-ம் தேதி பேரவை கூடும் என்று தமிழக அரசு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE