மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்

By செய்திப்பிரிவு

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை பொதுத்துறை நிறுவனமான பெல் (பாரத மிகுமின் நிறுவனம்) நெய்வேலியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கியது.

மத்தியப் பொதுத்துறை நிறுவனமான பெல் இந்தியா முழுவதும் பல்வேறு மின் திட்டப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் அனல் மின் நிலையப் பணிகளில் பெல் நிறுவனம் முக்கியப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் தென் மண்டலப் பிரிவு நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் நல திட்டப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தது.

அதனடிப்படையில் 107 மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நெய்வேலியில் நேற்று நடைபெற்றது. ரூ.6 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் செயற்கை கால், கை, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பெல் நிறுவனத்தின் தென் மண்டல பொதுமேலாளர் டி.பந்தோபத்யாய தலைமை வகித்தார். என்எல்சி மனித வளத்துறை இயக்குநர் சரத்குமார் ஆச்சார்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE