நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் 43,051 மையங்களில், காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.
தமிழகத்தில் முதல் தவணை பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த ஜனவரி 19-ம் தேதி நடந்தது. இந்த முகாமில் தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதுக்குட்பட்ட 70 லட்சம் குழந்தைகளில் 66.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு, சுகாதாரத்துறை பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் ஒரு வாரத்தில் வீடுவீடாக சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர்.
இந்நிலையில், இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் இன்று நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் என 43,051 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாம் நாளான இன்று வெளியூர் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 மையங்களும், தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக 1,000 நடமாடும் குழுக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரி கூறுகையில், "இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும். பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மறக்காமல் போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும். தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது" என்றார்.