கைகொடுக்குமா பருவமழை?- 1.66 லட்சம் ஹெக்டேரில் மானாவாரி பயிர் சாகுபடி: களம் இறங்கிய தூத்துக்குடி விவசாயிகள்

By ரெ.ஜாய்சன்

வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயிகள் பயிர் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் இந்த ஆண்டு 1.66 லட்சம் ஹெக்டேரில் மானாவாரி பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், எட்டய புரம், கயத்தாறு, கடம்பூர் உள்ளி ட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் பிரதானமாக உள்ளது. பருவமழை நன்றாக இருந்தால் மட்டுமே இப்பகுதியில் விவசாயம் செழிக்கும். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை கைகொடுக்காததால் இப்பகுதியில் விவசாயம் சரியாக நடைபெறவில்லை.

பணிகள் தொடக்கம்

ஆனால் கடந்த ஆண்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை நன்றாக இருந்தது. இதனால் மானாவாரி விவசாயமும் நல்ல முறையில் நடைபெற்றது. கடந்த ஆண்டில் 1.63 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு மானாவாரி சாகுபடி நடைபெற்றது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பருவமழை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மானாவாரி விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.

மானாவாரி பயிர்களை பொறுத் தவரை சிறுதானியங்கள் மற்றும் பயறு வகை பயிர்களே முக்கியமாக பயிரிடப்படுகின்றன. பருவமழை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னரே விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது விதைகளை விதைத்து விடுகின்றனர். மழை பெய்ததும் பயிர் முளைத்து வளரத் தொடங்கும்.

அதுபோல இந்த ஆண்டும் விவசாயிகள் நிலங்களை உழுது விதைகளை விதைத்தனர். பருவமழை இன்னும் தொடங்க வில்லை என்ற போதிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பயிர்கள் வளரத் தொடங்கியுள்ளன.

விவசாயிகள் நம்பிக்கை

மதிமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் அ. வரதராஜன் கூறும்போது, ‘கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துள்ளதால் பயிர்கள் முளைத்து ஓரளவுக்கு வளர்ந்துள் ளது. இந்த பயிர்களுக்கு களை எடுத்தல், மருந்து தெளித்தல் போன்ற பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் பயிர்கள் தற்போது தான் முளைக்க தொடங்கியுள்ளன. மேலும், சில பகுதிகளில் விவசாயிகள் தற்போது தான் நிலங்களை உழுது விதைத்து வருகின்றனர். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

கடந்த ஆண்டு துவரை பயிரிட மானிய உதவி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மானியம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பயிர்கள் முளைத்து வளரத் தொடங்கியுள்ளதால் யூரியா உரம் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார் அவர்.

1.66 லட்சம் ஹெக்டேர்

மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் வி. ஜெயக் குமார் கூறும்போது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மானாவாரி பயிர்கள் 1.66 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பயறு வகை பயிர்கள் 79 ஆயிரம் ஹெக்டேரும், சிறுதானிய பயிர்கள் 87 ஆயிரம் ஹெக்டேரும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 1.52 லட்சம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக் கப்பட்டு 1.63 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி செய்யப்பட்டது. அதுபோல இந்த ஆண்டும் அதிகளவில் சாகுபடி இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

மானாவாரியாக உளுந்து, பாசிப் பயறு போன்ற பயறு வகை பயிர்களும், சோளம், மக்காசோளம், கம்பு போன்ற சிறு தானியங்களும் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இதனை தவிர மிளகாய், வெங்காயம், சூரிய காந்தி, மல்லி போன்ற பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

மானிய உதவிகள்

மாவட்டத்தில் இதுவரை 70 முதல் 80 சதவீதம் பயிர்கள் விதைக்கப்பட்டு முளைத்து வளரத் தொடங்கியுள்ளன. விவசாயிகள் களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

பயறு வகை பயிர்களுக்கு டிஏபி ஸ்பிரே 17,400 ஹெக்டேருக்கும், தானிய பயிர்களுக்கு நுண் ஊட்டச்சத்து கலவை 7,800 ஹெக் டேருக்கும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப் படும். ஹெக்டேருக்கு ரூ.650 மானியம் வழங்கப்படும்.

இதேபோல் உளுந்து, பாசி பயர்களுக்கு தொகுப்பு செயல்வி ளக்க திடல் அமைக்க 5 ஒன்றியங் களில் 4,400 ஹெக்டேர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசா யிகளுக்கு ரூ. 4,000 மதிப்பில் விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்து போன்றவை வழங்கப் படும்.

இதேபோல் மக்காசோளம், கம்பு பயிர்களுக்கும் செயல்விளக்க திடல் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்’ என்றார் அவர்.

தட்டுப்பாடு இல்லை

வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கே. மதியழகன் கூறும்போது, ‘மாவட்டத்தில் விவசாயி களுக்கு உரம் தட்டுப் பாடின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் யூரியா ஒதுக்கீடு 1,500 டன். ஆனால் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் கூடுதல் யூரியா பெறப்பட்டு இதுவரை தனியார் மூலம் 1,204 டன், கூட்டுறவு துறை மூலம் 412 டன் என, மொத்தம் 1,616 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மாத இறுதிக்குள் தனியார் மூலம் 610 டன்னும், கூட்டுறவு துறை மூலம் 800 டன்னும் விநியோகம் செய்யப்படும்.

அதுபோல டிஏபி உரம் இந்த மாதத்துக்கு மொத்த ஒதுக்கீடு 680 டன். ஆனால் கூடுதலாக பெறப்பட்டு தனியார் மூலம் 1,796 டன், கூட்டுறவு மூலம் 932 டன் என மொத்தம் 2,728 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

காம்பளக்ஸ் உரம் ஒதுக்கீடு 1,050 டன் தான். ஆனால், தனியார் மூலம் 1,054 டன், கூட்டுறவு மூலம் 13 டன் என மொத்தம் 1,067 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு தேவையான உரம் உடனுக்குடன் ஒதுக்கீடு பெறப்பட்டு விநியோகம் செய்யப்படும்’ என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்