நாமக்கல்: ஆவின் பால் கொள்முதல் 6 லட்சம் லிட்டர் சரிவு: தமிழகத்தில் பால் தட்டுப்பாடு அபாயம்

By கி.பார்த்திபன்

வறட்சி, தீவன விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பால் உற்பத்தி குறைந்து, ஆவின் பால் கொள்முதல் அளவு சுமார் 6 லட்சம் லிட்டர் வரை சரிந்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், கூடுதல் விலை கொடுத்து தனியார் நிறுவனப் பாலை பொதுமக்கள் வாங்க வேண்டியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகம் முழுவதும் பால் வளத் துறையின் கட்டுப்பாட்டில் 17 ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. அவற்றில் 35 பால் குளிரூட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மாநிலம் முழுவதும் உள்ள 11 ஆயிரத்து 397 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் அனுப்பப்படுகிறது.

இதன்படி 17 பால் கூட்டுறவு ஒன்றியங்களுக்கும் தினமும் சுமார் 26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதுடன், பால் பவுடர், வெண்ணெய், நெய் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்களுக்கு 250 மில்லி லிட்டர், 500 மி.லி. என்ற அளவுகளில் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பால் கூட்டுறவு ஒன்றியங்களில் பால் கொள்முதல் அளவு குறைந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது.

இதனால், மக்களுக்கு பால் விநியோகம் செய்வதில் தட்டுப்பாட்டு ஏற்படுள்ளது. அதேசமயம், தனியார் பால் நிறுவனத்தினர் எவ்வித தட்டுப்பாடுமின்றி பால் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.

20 லட்சம் லிட்டர் கொள்முதல்

இதுகுறித்து கூட்டுறவு சங்க அலுவலர்கள் கூறியது: தமிழகம் முழுவதுமுள்ள 17 பால் கூட்டுறவு ஒன்றியங்களில், தினமும் 26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலைமாறி, தற்போது 19 முதல் 20 லட்சம் லிட்டர் அளவுக்கே பால் கொள்முதல் செய்யப்படுகிறது. வறட்சியும், பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு அதிக அளவில் பால் வழங்குவதுமே இதற்கு முக்கியக் காரணம்.

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தி, தற்போது ரூ.21.60-க்கு வழங்குகிறது. அதேவேளையில், தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு ரூ.26 முதல் ரூ.28 வரை வழங்குகின்றன. கூடுதல் விலை கிடைப்பதால், உற்பத்தியாளர்கள் பலர் தனியார் நிறுவனங்களுக்கே பால் வழங்குகின்றனர்.

எனவே, ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற பால் கூட்டுறவு சங்கத் தேர்தலில், ஆளுங்கட்சியினர் தலையீடு அதிகமாக இருந்ததாகப் புகார்கள் எழுந்தன. பால் உற்பத்தியாளராக இல்லாத நிலையிலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராக இருந்ததால் சங்கத் தலைவர், இயக்குநர் உள்ளிட்ட பொறுப்புகள் கிடைத்தன. இதனால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, பால் உற்பத்தியாளர்கள் பலர் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்காமல், தனியாருக்கு பால் வழங்கி வருகின்றனர்.

மானிய விலை தீவனம்

அதுமட்டுமின்றி, ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தொடர்ச்சியான முறையில், மானிய விலையில் தீவனம் வழங்கப்படுவதில்லை. பால் குறையும் சமயத்தில் மட்டும் மானிய விலை தீவனம் வழங்கப்படுகிறது.

தனியார் பால் சேகரிப்பு நிறுவனத்தினர் எவ்விதப் பிரச்சினையுமின்றி பால் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். அவர்களிடம் முறையான அனுமதி உள்ளதா என்று கூட தெரியவில்லை. இது தொடர்பாக பால் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

பால் விநியோகம் 20 சதவீதம் குறைவு

பால் கொள்முதல் அளவு குறைவு காரணமாக சென்னை தவிர, பிற மாவட்டங்களில் பாக்கெட் பால் விநியோகம் 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் நிறுவன பாலை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் வழங்கப்படுவதைப்போல, தமிழகத்திலும் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். அப்போதுதான் ஆவின் நிறுவனத்துக்கு பால் உற்பத்தியாளர்கள் அதிக அளவில் பால் வழங்க முன்வருவர். தட்டுப்பாடு நீங்கி, பால் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகரிக்கும், என்றனர்.

சப்தமின்றி உயர்த்தப்படும் பால் விலை?

பால் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி தனியார் நிறுவனத்தினர் பால் விலையை உயர்த்தியுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 500 மி.லி. பாலின் விலை ரூ.18-ஆக இருந்தது. பின்னர் அது ரூ.19-ஆக உயர்ந்து, தற்போது 500 மி.லி. பால் ரூ.20-க்கு விற்கப்படுகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக தனியார் நிறுவனத்தினர் பால் விலையை சப்தமின்றி உயர்த்தி வருவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்