பால் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில் தொலைபேசி மூலம் அழைத்து புதிய கார்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அண்மைக்காலமாக, ஆவின் நிறுவனத்தால் அதிக அளவில் பால் சப்ளை செய்யமுடியவில்லை. மாதாந்திர அட்டைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியவில்லை. எனவே புதிய அட்டைகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆவின் பால் விநியோகம் குறைந்ததால் தனியார் பால் நிறுவனங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்தது.
இந்நிலையில், உற்பத்தியாளர் களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதற்காக ஆவின் நிறுவனம் சமீபத்தில் பால் விலையை 40 சதவீதம் உயர்த்தியது. லிட்டருக்கு 10 ரூபாய் வரை விலை அதிகரிக்கப்பட்டது. இதனால் கடைகளில் ஆவின் பால் வாங்குவோர், மாதாந்திர கார்டுதாரர்களை விட மாத மொன்றுக்கு குறைந்தது ரூ.400 வரை அதிகம் செலவிட வேண்டி யிருக்கிறது. இதனால் ஆவின் மாதாந்திர அட்டை கோரி மக்கள் அதிகளவில் மனு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், பால் அட்டைகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் நாள்தோறும் 11.50 லட்சம் லிட்டர் பாலை ஆவின் விநியோகிக்கிறது. அதில், கார்டுதாரர்களுக்கு 7.4 லட்சம் லிட்டர் அளிக்கப்படுகிறது. பால் கொள்முதல் தற்போது 20.6 லட்சம் லிட்டரிலிருந்து 24 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளதால், ஜனவரி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பால் கார்டு விநியோகத்தை மீண்டும் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆவின் பால் விநியோக நடைமுறைகள் மேம்படுத்தப்படுமா?
பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ள ஆவின் நிறுவனம், பால் விநியோக முறையின் தரத்தை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அந்நிறுவனம், வாடிக்கையாளர் சேவையின் தரத்தையும் உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை வாடிக்கையாளர்களிடையே எழுந்துள்ளது. உதாரணமாக தனியார் பால் நிறுவனங்களின் பாக்கெட்டுகள் அவ்வளவு எளிதில் கிழிவதில்லை. ஆனால் ஆவின் பால் பாக்கெட் பல நேரங்களில் கிழிந்து பால் வீணாகிறது.
எனவே, தனியார் நிறுவனங்களைப் போல், பாலை அடைத்து வைக்கும் பாக்கெட்டின் (ஃபில்ம்) தரத்தினை உயர்த்தவேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், பால் பாக்கெட்டுகளை அடுக்க பயன்படுத்தப்படும் டிரேக்கள், சரியாக கழுவப்படாததால் அவற்றில் வரும் பாக்கெட்டுகளில் உள்ள பாலைக் காய்ச்சும்போது, சில நேரங்களில் திரிந்து போவதாக கூறப்படுகிறது.
இதுதவிர, டெப்போக்களில், மாதாந்திர பால் அட்டையினைப் புதுப்பிப்பதற்காகவும், புகார்களை பதிவு செய்வதற்காகவும் செல்லும் மண்டல அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான மண்டல அலுவலகங்களில் போதிய இருக்கை வசதிகள், மின்விசிறி ஆகியவைகூட இல்லாத நிலை இருக்கிறது. எனவே, அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மின்விசிறிகள், நாற்காலிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆவின் விளக்கம்
இது குறித்து ஆவின் நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ஆவின் பால் சாஷேக்களுக்கு தரமான ஃபில்ம்-கள் பயன்படுத்தப்படுகின்றன. பாலை பேக் செய்யும்போது இயந்திரங்களில் பிரச்சினைகள் ஏற்படுவதால் சில சமயம் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்படுகின்றன. அதைத் தடுப்பதற்காக தற்போது நவீன இயந்திரங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கிறோம். முதல் கட்டமாக அம்பத்தூர் பால் பண்ணைக்கு ஒரு இயந்திரத்தை வாங்கியுள்ளோம்.
பால் டிரேவை சுத்தமாக வைத்திருக்க மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. தற்போது, அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் ஆகிய பண்ணைகளில் தலா ஒரு டிரே சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளது. மேலும் சில இயந்திரங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களில் படிப்படியாக, வசதிகள் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago