‘ஆவின் நிர்வாகத்தை சீர்படுத்தினால் லாபத்தில் இயங்கலாம்’ - ஆவின் தொழில்நுட்ப அலுவலர்கள் கருத்து

By குள.சண்முகசுந்தரம்

ஆவின் பால் விலை உயர்வு விவகாரம் அரசுக்கு எதிராக அதிருப்தி அலைகளை உருவாக்கி இருக்கும் நிலையில், ஆவின் நிறுவனத்தில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்தால் ஒவ்வோர் ஆவின் பால் ஒன்றியமும் ஆண்டுக்கு தலா 10 கிராமங்களுக்கு அடிப்படை தேவைகளைச் செய்து கொடுக்க முடியும் என்கிறார்கள் ஆவின் நிர்வாகத்தில் இருப்பவர்கள்.

தமிழகத்தில் மொத்தம் 29 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் செயல்படுகின்றன. இவை மூலமாக தினமும் சுமார் 27 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

தொழில்நுட்ப படிப்பு நிறுத்தம்

ஆவின் பால் பண்ணைகள் ஆரம்பித்தபோது பால் பண்ணைத் தொழில்நுட்பம் (Dairy Technology) படித்தவர்கள் பால் பண்ணை மேலாளர்களாகவும் இளநிலை பால் பண்ணை அலுவலர்களாகவும் நியமிக் கப்பட்டார்கள். தொடக்கத்தில், பெங்களூரில் உள்ள தேசிய பால் பண்ணை ஆராய்ச்சி மையத்தில் பால் பண்ணைத் தொழில்நுட்பப் படிப்பு முடித்தவர்கள்தான் ஆவின் பண்ணைகளில் தொழில் நுட்பப் பணியாளர்களாகப் பணியமர்த்தப்பட்டார்கள்.

ஆனால், 1986-ல் பண்ணைத் தொழில்நுட்பப் படிப்புகளை நிறுத்திய பெங்களூர் தேசியப் பண்ணை ஆராய்ச்சி மையம், அந்தந்த மாநிலங்கள் இந்தப் படிப்பை ஆரம்பித்துக் கொள்ள வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசு அப்படி எந்த படிப்பையும் ஆரம்பிக்கவே இல்லை. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக ஆவினில், பால் பண்ணைத் தொழில் நுட்பம் படித்த அலுவலர்கள் பணி நியமனமும் நடைபெறவில்லை.

30 பேர்தான் உள்ளனர்

முன்பு தமிழகம் முழுவதும் ஆவின் பால் பண்ணைகளில், பால் பண்ணைத் தொழில்நுட்பம் தெரிந்த அலுவலர்கள் சுமார் 200 பேர் பணியில் இருந்தார்கள். இப்போது சுமார் 30 பேர்தான் உள்ளனர். இவர்களில் பெரும் பாலானோர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வுபெற இருப்பவர்கள்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பண்ணை தொழில்நுட்ப அலுவலர்கள் கூறியதாவது: பால் பண்ணைத் தொழில் நுட்பம் படித்த நாங்கள் பாலின் நிறத்தைப் பார்த்தே மாட்டுக்கு என்ன நோய் என்பதைச் சொல்லி விடுவோம். ஆனால் இப்போது, 90 சதவீதம் பேர் தொழில்நுட்பம் தெரியாதவர்கள்.

பண்ணைத் தரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு வழங்கிய நவீன கருவிகளைக் கையாள தகுந்த நபர்கள் இன்றி அவை முடங்கிக் கிடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் பார்வைக் கோளாறுகள் ஏற்படுவதாக கணக்கெடுத்த யுனிசெஃப் நிறுவனம், பசும்புல் சாப்பிடும் பசு மாட்டின் பால் குடித்தால் பார்வைக் கோளாறு சரியாகும் என்று கூறி. கிராமங்களில் பசும்புல் பண்ணை அமைக்க தமிழகத்துக்கு ரூ.400 கோடி வழங்கியது. ஆனால், அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து அந்த ரூ.400 கோடியில் பெரும் பங்கை விழுங்கிவிட்டார்கள்.

தகுதியான தொழில்நுட்பப் பணியாளர்களைக் கொண்டு செயல்படுவதால் தனியார் பால் நிறுவனங்கள் பெருமளவு லாபம் சம்பாதிக்கின்றன. ஆவின் பால் பண்ணைகளையும் தகுதி வாய்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்தினால் பால் விலையை உயர்த்தாமலே ஆவினை லாபத்தில் இயங்க வைக்க முடியும். இது தவிர ஒவ்வொரு பண்ணையும் ஆண்டுக்கு 10 கிராமங்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்து கொடுக்கும் அளவுக்கு லாபமும் ஈட்டமுடியும்.

இவ்வாறு அந்தப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE