பேரவையில் இருந்து துரைமுருகன் 5 நாள்களுக்கு சஸ்பெண்ட்

அவையின் உரிமையை மீறும் வகையில் நடந்துகொண்டதாக, திமுக சட்டமன்றக் குழு துணைத் தலைவர் துரைமுருகனை 5 நாள்களுக்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

கடந்த அக்டோபரில் நடைபெற்ற கூட்டத்தொடரின்போது, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்ததாக துரைமுருகன் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் கே.பி. முனுசாமி பிரச்சினை எழுப்பினார். துரைமுருகன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள், பேரவைத் தலைவரின் அனுமதியின்றி சிறிய பஸ் குறித்து தவறான கருத்துகளை தெரிவித்து, அவையின் செயல்பாட்டிற்கு பாதகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டனர் என்றும், அவையின் உரிமையை மீறும் செயல் என்பதால், மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தப் பிரச்சினை, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை, சட்டப்பேரவைத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், உரிமை மீறல் குழுவின் பரிந்துரைப்படி, துரைமுருகன் இன்று முதல் 5 நாள்களுக்கு அவையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்த சபாநாயகர், மு.க.ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE