திருப்பூரில் ரூ.870 கோடி நிதி நிறுவன மோசடி: ஒரு நபர் குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பூரில் பாசி என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.870 கோடி மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜ், கதிரவன் ஆகியோருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கியும், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க ஒருநபர் குழுவை அமைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

திருப்பூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். அவரது தந்தை கதிரவன். மோகன்ராஜ் மனைவி குமுதவள்ளி. இவர்கள் மூவரும் 2008-09-ம் ஆண்டில் 3 நிறுவனங்களைத் தொடங்கி, அதிக வட்டி தருவதாகக்கூறி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்தனர்.

அதன்படி, முதிர்ச்சி அடைந்த பிறகும் அசலும், வட்டியும் தராமல் ஏமாற்றியுள்ளனர். இதன்மூலம் 52,893 பேரிடம் ரூ.870 கோடியே 10 லட்சத்து 85,878 மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. மோகன்ராஜ் உள்ளிட்ட 3 பேரையும் சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

கோவையில் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் கேட்டு மோகன்ராஜ், கதிரவன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் 2012-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டன. மீண்டும் இருவரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி இந்த மனுக்களை விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:

கோவையில் உள்ள ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எம்.தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கிறேன். நீதிபதி தனது கடமையைச் செய்ய வசதியாக மனுதாரர்கள், அவர்களது அலுவலகத்தில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தர வேண்டும்.

வழக்கு தொடர்பான ஆவணங்களை இந்த குழு சரிபார்க்க சிறப்பு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். முதலீடு செய்து ஏமாந்தவர்கள் 30 நாட்களுக்குள் தங்களுக்கு வர வேண்டிய தொகை குறித்து குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.

இக்குழு, உண்மையிலேயே முதலீடு செய்தவர்களையும், அவர்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார்கள் என்பதையும் துல்லியமாகக் கண்டறிய வேண்டும். இதுவரை முதலீட்டுத் தொகை பெறாதவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். முதலீடு செய்த பணத்துக்கு 3 ஆண்டுகளுக்கு 10 சதவீதம் வட்டியைச் சேர்த்து கணக்கிட வேண்டும். குழுவின் முடிவே இறுதியானது. இக்குழு, தனது இறுதிப்பட்டியலை 3 மாதத்துக்குள் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். குழு கூடுதல் அவகாசம் கேட்டால் 2 மாதம் வரை தரலாம்.

மனுதாரர்கள் மோகன்ராஜ், கதிரவன் ஆகியோருக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் சென்னையில் தங்கியிருந்து சிபிஐ பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி.சங்கர் முன்பு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும். அவர் இவர்களை சிங்கப்பூர் அழைத்துச் சென்று அங்கு முதலீடு செய்துள்ள ரூ.90 கோடியை வங்கியில் இருந்து முறையாக மீட்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை மீட்கப்படாத அசையும் மற்றும் அசையா சொத்துகளை மீட்டு, அந்த சொத்துகளை ஏலத்தில் விட்டு, அந்தப் பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6 மாதங்களுக்குப் பிறகு மனுதாரர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். பின்னர் அவர்கள் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தையோ அல்லது உயர் நீதிமன்றத்தையோ அணுகலாம்.

இவ்வாறு நீதிபதி அக்பர் அலி தீர்ப்பளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE