பைலின் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை: ரமணன்

ஆந்திராவையும் ஒடிசாவையும் கடுமையாக அச்சுறுத்தும் பைலின் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.ரமணன் கூறியது:

“தமிழகத்தின் வட பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. வெப்ப சலனம் காரணமாக பெய்த இந்த மழை, தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும் லேசாக பெய்தது. இன்னும் ஓரிரு நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும்.

வெள்ளிக்கிழமை காலை வரை முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக அதிக அளவாக, பட்டுகோட்டையில் 9 செ.மீ, அரியலூரில் 7 செ.மீ, திருத்துறைப்பூண்டி மற்றும் நீலகிரி மாவட்டம் தேவலாவில் 6 செ.மீ, கீரனூர் மற்றும் செட்டிக்குளத்தில் 5 செ.மீ என்ற அளவில் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் சனிக்கிழமையும் இதே போல் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

ஆந்திராவுக்கும் ஒடிசாவுக்கும் இடையே கரையை கடக்கவுள்ள பைலின் புயலால் தமிழகத்தில் மழை பெய்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை முற்றிலும் தவறான செய்தி. தமிழ்நாட்டில் பெய்யும் மழை வெப்ப சலனத்தால் பெய்கிறது. பைலின் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவ்வாறு தவறாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்” என்றார் ரமணன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE