தேர்தல் விதிகளை மீறுகிறது தமிழக அரசு: தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்
இது குறித்து திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர். பாலு, தலைமை தேர்தல் ஆணையர் வி.கே. சம்பத்திடம் திங்கள்கிழமை புகார் அளித்தார். திமுகவின் அமைப்புச் செயலர் டி.கே.எஸ். இளங்கோவன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி ஆகியோர் அந்தப் புகார்களில் கையொப்பமிட்டுள்ளனர்.
தமிழக அரசு, கடந்த 23-ம் தேதி அறிமுகப்படுத்திய 660 சிறிய பேருந்துகளின் மூன்று பக்கமும் வரையப்பட்டிருக்கும் இரட்டை இலை படங்களைக் குறிப்பிட்டு ஒரு புகாரும் சேலம் மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் எனக் கோரி மற்றொரு புகாரும் தரப்பட்டுள்ளது. புகார்களின் விவரம் வருமாறு:
அரசு செலவில் வாங்கி விடப்பட்டுள்ள பேருந்துகளில், அஇஅதிமுகவின் சின்னத்தை வரைவது பிரசாரம் செய்வதற்கு ஒப்பாகும். ஏற்காடு இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக இவ்வாறு தமிழக அரசு செய்துள்ளது.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் அரசுப் பணத்தை அஇஅதிமுகவின் தேர்தல் லாபத்துக்காக பயன்படுத்துகிறார்கள். தேர்தல் ஆணையம் தலையிட்டு உடனடியாக பேருந்துகளில் உள்ள அதிமுக சின்னங்களை அகற்ற வேண்டும்.
அதிமுக கட்சிக்காரர் போல செயல்படும் சேலம் மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும். அக்டோபர் 25-ல் வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலரான அய்யனாரால் திமுக வேட்பாளர் மாறன் மீது அளிக்கப்பட்ட புகாரில், தேர்தல் விதிமுறைகளை மீறி பத்துக்கும் அதிகமான வாகனங்களில் பிரசாரத்திற்கு அவர் வந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த புகார், சம்பவம் நடந்ததற்கு 3 நாட்களுக்கு பிறகு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. இது, மாவட்ட ஆட்சியரின் கட்டாயத்தால் கிராம நிர்வாக அலுவலர் அளித்துள்ள புகாராகும். இவ்வாறு புகார் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் புகார்களை அளித்த பிறகு டி.ஆர். பாலு செய்தியாளர்களிடம் பேசியது: உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலின் போது பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னம் என்பதற்காக நூற்றுக்கணக்கான யானை சிலைகள் துணிகளால் மூடப்பட்டன.
அதுபோல் அரசுப் பேருந்துகளில் உள்ள இரட்டை இலைச் சின்னம் மறைக்கப்பட வேண்டும். தந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்து ஒரு தமிழ் நாளிதழில் கொடுத்துள்ள விளம்பரத்தில், ரூ.92 லட்சம் செலவு செய்து குடிநீர்த் திட்டங்களையும், கழிவுநீர்த் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக கூறியுள்ளது. இது விதிகளை மீறிய செயலாகும் என்றார்.