மே 1 முதல் முழு மதுவிலக்கு: பாமக நிழல் பட்ஜெட்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் மே 1 உழைப்பாளர் நாள் முதல் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுவது வழக்கம்.

தமிழக பட்ஜெட் வரும் 13-ஆம் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாமக நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் இன்று வெளியிட்டார்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களைத் தொகுத்து, பாமக வெளியிட்ட அறிக்கை:

பள்ளிக் கல்வி

* அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி, கட்டணமில்லாக் கல்வி, தரமான கல்வி, சுகமான, சுமையற்ற கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி வழங்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ, ஐஎஸ்சிஇ ஆகிய பாடத் திட்டங்களுக்கு இணையான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படும்.

* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள், பொதுப்பிரிவினருக்கு 55 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 45 விழுக்காடும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 40 விழுக்காடும், மாற்றுத் திறனாளிகளுக்கு 35 விழுக்காடும் தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்படும்.

* கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.30,000 கோடியாக உயர்த்தப்படும்.

* திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

சுகாதாரம்

* அனைத்து மக்களுக்கும் அனைத்து வகையான சிகிச்சையும் தரமாகவும், இலவசமாகவும் வழங்கப்படும். இதற்காக அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.

* நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலும், அரியலூர் மாவட்டத்திலும் நடப்பாண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்.

* மருத்துவர்கள் பணிநியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை கண்டிப்பாக கடைபிடிக்கப்படும்.

* மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக இருக்கும்போதே அவர்களை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக அமர்த்தி, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுவிடும்.

* ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் அனைவரும் பணிநிலைப்பு செய்யப்படுவார்கள்.

விவசாயம்

* வேளாண்மைக்குத் தேவையான தரமான விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

* வேளாண் பணிகளுக்காக விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வசதியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு டிராக்டர் இலவசமாக வழங்கப்படும்.

* வேளாண் விலைப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதை வேளாண் விலை நிர்ணய வாரியம் ஏற்படுத்தப்படும். உழவர் ஊதியக் குழு அமைக்கப்படும்.

* வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.10,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

* கோமாரி நோயால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும்.

மதுவிலக்கு

* தமிழ்நாட்டில் மே 1 உழைப்பாளர் நாள் முதல் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

* ஆற்று மணல், கிரானைட், தாது மணல் ஆகிய இயற்கை வளங்கள் கொள்ளையடிப்பதைத் தடுப்பதன் மூலம் ரூ.60,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும்.

* தேவையற்ற செலவுகள் - மற்றும் மானியங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ரூ.15,000 கோடி மிச்சப்படுத்த முடியும் என்பதால், மதுவிலக்கால் ஏற்படும் வருவாய் இழப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

ஊழல் ஒழிப்பு

* ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* அரசு சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும்.

* தேர்தல்களில் வாக்குகளை விலைக்கு வாங்கும் தீய வழக்கத்திற்கு முடிவு கட்டவும், வாக்குகளை விற்பனை செய்யும் தீமை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல..." என்ற தலைப்பிலான பிரச்சாரத்தை அரசே மேற்கொள்ளும்.

சட்டம் - ஒழுங்கு

* குண்டர் தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றவை அரிதிலும் அரிதாக தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டுமே பயன்படுத்தப்படும். தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் ஒருவரை கைது செய்வதற்கான அதிகாரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவுக்கு அளிக்கப்படும்.

* பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தனி காவல் பிரிவு ஏற்படுத்தப்படும். இப்பிரிவுக்கு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவார்.

* நிர்வாக வசதிக்காக தமிழகத்தின் பெரிய மாவட்டங்களான வேலூர், விழுப்புரம் மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்படும்.

தொழில்துறை

* தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான அனுமதி ஒற்றைச்சாரளமுறையில் வழங்கப்படும்.

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள நிலையை மாற்றி, அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்துத் துறை

* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும். மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களிலும் மெட்ரோ ரயில்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

மின் உற்பத்தி

* தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்ற திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள சுமார் 12,000 மெகாவாட் திறன் கொண்ட மின்உற்பத்தித் திட்டங்களையும், புதிய மின்திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த மின்திட்ட செயலாக்கத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்படும்.

* பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் அனல்மின் நிலையத் திட்டம், முன்னுரிமை அடிப்படையில் செயல்படத் தொடங்கும்.

மகளிருக்கு அதிகாரம்

* தமிழ்நாட்டில் உள்ளாட்சிப் பதவிகள், அரசுப் பணிகள் மற்றும் கல்வியில் மகளிருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கான சட்டதிருத்தம் நடப்புக் கூட்டத்தொடரில் கொண்டுவந்து நிறைவேற்றப்படும்.

* மாணவிகள் மற்றும் இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் கடுமையான குற்றமாக கருதப்படும். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யப்படும்.

மற்றவை

* தமிழை தேசிய ஆட்சி மொழியாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும். தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

* தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் 5 ஆண்டுகளில் 3 வளர்ச்சித் திட்டங்களாவது செயல்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்படும்.

* சத்துணவு உட்கொள்ளும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மாலையில் பால் மற்றும் ரொட்டி வழங்கப்படும்.

* அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்றே அவர்களுக்கான அனைத்து ஓய்வூதியப் பயன்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சென்னை அருகே பத்திரிகையாளர்களுக்கு 1,000 வீடுகள் கட்டித்தரப்படும். மாவட்டத் தலைநகரங்கள் அளவில் பத்திரிகையாளர்களுக்காக அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டு குடியிருப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

பாமக பரிந்துரையும், அரசின் அலட்சியமும்

ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக சில அடிப்படை கடமைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

நாட்டின் நிதிநிலை எவ்வாறு உள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட வேண்டும். அதேபோல் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எவை, எவை செயல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை விளக்குவதற்காக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை செயலாக்கப்பட்ட விவர அறிக்கை (Action Taken Report) அவையில் வைக்கப்பட வேண்டும்.

அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் எத்தகைய தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாட்டுக்கு தெரிவிக்க கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை திட்டங்களின் விளைவுகளும், தாக்கங்களும் அறிக்கை (Outcome Budget) தாக்கல் செய்யப்பட வேண்டும்.

மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த பாலின நிதிநிலை அறிக்கை

(Gender Budget) சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்த அறிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறது. தமிழகத்திலும் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டால் ஆரோக்கியமான பொருளாதார சூழலை உருவாக்க முடியும் என்று கூறிவருகிறோம். எங்களின் இந்த திட்டங்களும், யோசனைகளும் அற்புதமானவை என்று தமிழக அரசு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பாராட்டுகிறார்கள்.

ஆனால், இத்தகைய அறிக்கைகளை வெளியிட ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். காரணம், திராவிட ஆட்சியாளர்கள் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கைகளின் திட்டங்களில் பெரும்பாலானவை செயல்படுத்தப்படுவதில்லை; செயல்படுத்தப்படும் திட்டங்களால் சமுதாயத்தில் எந்த வித தாக்கமும் ஏற்படுவதில்லை.

எனவே தான் இத்தகைய அறிக்கைகளை திராவிட ஆட்சியாளர்கள் தாக்கல் செய்வதில்லை. மாறாக, Performence Report என்ற பெயரில் ஒவ்வொரு துறை சார்பிலும் பெயருக்காக ஓர் அறிக்கையை தாக்கல் செய்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த அறிக்கைகள் அனைத்தும் வெளியிடப்படும் என உறுதியளிக்கிறோம்.

இவ்வாறு பாமக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்