நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி: அன்புமணி

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பசுமை தாயகம் சார்பில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது "இலங்கையில் நடந்தது போர் அல்ல. தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை என்பதை ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணைய கூட்டத்தில் விளக்கினேன். இந்த இனப்படுகொலைக்கு காரணமான அனைவரையும் தண்டிக்க வேண்டும். அதற்கு, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு சென்று, அங்குள்ள நிலமைகளை நேரில் பார்த்து தாக்கல் செய்துள்ள அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். அந்த அறிக்கையில் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல், தமிழர்கள் தாக்கப்படுவது, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை, தமிழர்கள் பகுதியில் சிங்களர்கள் குடியமர்த்துதல் ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. இலங்கைக்கு இந்தியா அழுத்தம் தராவிட்டால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளால் நம் நாட்டுக்கு பாதகம் ஏற்படும். தமிழக முதல்வர் அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களை ஒன்று திரட்டி பிரதமரை சந்தித்து அழுத்தம் தந்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்கவும், படகுகளை மீட்கவும் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக கேட்டதற்கு, "வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்பதில் பாமக உறுதியாக உள்ளது. பாரதிய ஜனதா உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை" என்றார் அன்புமணி ராமதாஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE