சென்னை திருநெல்வேலி உள்பட 3 புதிய பிரீமியம் வாராந்திர சிறப்பு ரயில்கள்

By செய்திப்பிரிவு

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை திருநெல்வேலி, சென்னை திருவனந்தபுரம், சென்னை ஹவுரா இடையே 3 புதிய பிரீமியம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி - சென்னை பிரீமியம் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06746) திருநெல்வேலியில் இருந்து வரும் 25-ம் தேதி மற்றும் மே 2-ம் தேதி காலை 9.15 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் அன்றிரவு 8.05 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு வரும் 15-ம் தேதியும், 22-ம் தேதியும் தொடங்கும்.

சென்னை சென்ட்ரல் திருநெல்வேலி பிரீமியம் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06745) சென்ட்ரலில் இருந்து வரும் 25-ம் தேதியும், மே 2-ம் தேதியும் இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு வரும் 15 மற்றும் 22-ம் தேதிகளில் தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில்களில் 715 இரண்டாம் வகுப்பு படுக்கைகளும், 3 அடுக்கு ஏ.சி.வகுப்பில் 378 படுக்கைகளும், 2 அடுக்கு ஏ.சி. வகுப்பில் 46 படுக்கைகளும் உள்ளன.

திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் பிரீமியம் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06312) திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 23-ம் தேதி மற்றும் 30-ம் தேதிகளில் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்துசேரும். இந்த ரயிலுக்கான முன் பதிவு முறையே வரும் 13 மற்றும் 20-ம் தேதிகளில் தொடங்குகிறது. இந்த ரயில் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், பாலக்காடு, கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் பிரீமியம் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06311) சென்ட்ரலில் இருந்து வரும் 24-ம் தேதி மற்றும் மே 1-ம் தேதி மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு திருவனந்தபுரம் போய்ச் சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு வரும் 14 மற்றும் 21-ம் தேதிகளில் தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில்களில் 786 இரண்டாம் வகுப்பு படுக்கைகளும், 3 அடுக்கு ஏ.சி.வகுப்பில் 381 படுக்கைகளும், 2 அடுக்கு ஏ.சி. வகுப்பில் 91 படுக்கைகளும் உள்ளன.

ஹவுரா சென்னை சென்ட்ரல் பிரீமியம் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 02841) ஏப்ரல் 25-ம் தேதி முதல் வரும் ஜூன் மாதம் 26-ம் தேதி வரை வெள்ளிக்கிழமைதோறும் ஹவுராவில் இருந்து பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு, சனிக்கிழமை பகல் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்துசேரும்.

சென்னை சென்ட்ரல் ஹவுரா பிரீமியம் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 02842) ஏப்ரல் 26ம் தேதி முதல் வரும் ஜூன் மாதம் 28ம் தேதி வரை சனிக்கிழமைதோறும் சென்ட்ரலில் இருந்து மாலை 5.20 மணிக்குப் புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.10 மணிக்கு ஹவுரா போய்ச் சேரும். இந்த சிறப்பு ரயில்கள் கரக்பூர், புவனேஸ்வரம், துவாடா, விஜயவாடா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு, ரயில் புறப்படும் நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்னதாக தொடங்கும். உதாரணத்துக்கு வரும் 26-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு வரும் 16-ம் தேதி தொடங்கும்.

பிரீமியம் வாராந்திர சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் மாறுதலுக்கு உட்பட்டது. இந்த ரயிலுக்கான தேவை அதிகரிக்கும்போது இரண்டாம் வகுப்பு படுக்கைக்கான கட்டணம் 150 சதவீதமும், ஏ.சி. வகுப்புக்கான கட்டணம் 200 சதவீதம் அதிகரிக்கும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான தொடக்க கட்டணம், மற்ற ரயில்களுக்கான தட்கல் கட்டணம் ஆகும். அதாவது, சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வதற்கான கட்டணத்துடன், தட்கல் கட்டணத்தைச் சேர்த்தால் எவ்வளவு வருமோ அதுதான் பிரீமியம் சிறப்பு ரயிலுக்கான தொடக்க கட்டணமாக இருக்கும். டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு வரை இ-டிக்கெட் மூலம் மட்டுமே எடுக்க முடியும். இன்டர்நெட் டிக்கெட் அல்லது வழக்கமான கவுன்ட்டர் டிக்கெட் மூலம் இந்த ரயிலுக்கான டிக்கெட் எடுக்க முடியாது. ரயில் சேவை ரத்து செய்தால் மட்டுமே கட்டணம் திருப்பித் தரப்படும். மற்றபடி எச்சூழ்நிலையிலும் ரயில் கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது.

பயணிகள் பட்டியல் தயாரித்த பிறகு, படுக்கைகள் காலியாக இருந்தால், இந்த ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் நடப்பு முன்பதிவு உண்டு.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்