உள்ளாட்சி: விவசாயிகளைக் கொன்று புதைத்த பணத்தை தொடலாமா?

By டி.எல்.சஞ்சீவி குமார்

‘பணத்தை தண்ணீர் மாதிரி வாரி இறைத்தார்கள்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். கடந்த 2013-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம். குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு என்ன செய்தது தெரியுமா?

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மெகா சைஸ் எல்.இ.டி. திரை வைத்து, அதில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்தது. ஒரு எல்.இ.டி. திரைக்கு மட்டும் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவானது. மாநிலம் முழுவதும் செலவு பல கோடி. தண்ணீர் சிக்கனத்துக்காக பணத்தை தண்ணீர்போல் இறைத்த ஒரே அரசு தமிழக அரசாகத்தான் இருக்க முடியும்!

குடிமராமத்துத் திட்டம் என்று தனியாக தேவையே இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். காரணம் இல்லாமல் சொல்லவில்லை. ஒரு விஷயத்தை கவனி யுங்கள். தமிழகத்தில் ஏற்கெனவே ஏராளமான நீர்நிலைகள் தொடர்பான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல திட்டங்கள் கோப்பு களிலேயே உறங்குகின்றன.

பல திட்டங்கள் பாதியில் கைவிடப்பட்டன. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் பல. அத்திக்கடவு - அவினாசித் திட்டம், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர் - பாலாறு திட்டம், காவிரி - தொப்பையாறு திட்டம், ராமநதி - கடனா நதித் திட்டம், கருமேனி - நம்பியாறு திட்டம் இப்படி வரிசையாக பட்டியல் போடலாம்.

பல்வேறு திட்டங்கள் தொடங்காமல் இருப்பதற்கும், பாதியில் நிற்பதற்கும் மாநில அரசு சொல்லும் காரணம் ‘நிதியின்மை’என்பதுதான். இங்கே ஒரு கேள்வி எழுகிறது... அத்திக்கடவு - அவினாசி போன்று ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் ஒரு திட்டம் நிதியின்மைக் காரணமாக பாதியில் நிற்கிறது. இந்தச் சூழலில் குடிமராமத்து என்று புதியதாக ஒரு திட்டம் போடப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்? எல்லாம் சரி, இன்னொரு விஷயத்தையும் மக்கள் தெரிந்துக்கொள்வது அவசியம்.

மத்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரகம் சார்பில் பிரதம மந்திரி வேளாண்மை மேம்பாடு திட்டம் (PMKSY) நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்துடன் இணைத்து இந்தத் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளையும் விவசாயத்தையும் மேம்படுத்துவதுதான் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

தடுப்பணைகள் கட்டுதல், பண்ணைக் குட்டைகள் வெட்டுதல், புதிய ஏரிகளை உருவாக்குதல், கரைகளை வலுப்படுத்துதல், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் நிலத்தடி நீரைப் பெருக்குதல், நீர் நிலைகளைப் பழுது பார்த்தல், பாரம்பரிய ஏரிகளைத் தூர் வாருதல், புனரமைத்தல், மழை நீர் சேகரிப்பு உள்கட்டமைப்புகளைப் பலப்படுத்துதல், தண்ணீர் உபரியாக இருக்கும் இடங்களில் இருந்து பற்றாக்குறையாக இருக்கும் இடங்களுக்கு கால்வாய்களை வெட்டி திருப்பிவிடுதல், பள்ளமான இடங்களில் இருக்கும் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பாசனத்துக்கான நீரேற்றுத் திட்டங்களை செயல்படுத்துதல், விவசாய நிலங்களைப் பண்படுத்துதல், வயல் வரப்புகள் அமைத்தல், மலைகளில் அடுக்கு வயல் அமைத்தல், மண் வளத்தை மேம்படுத்துதல், ஈரப்பதம் பாதுகாப்பு (பசுங்குடில்கள் திட்டம்), மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்துதல், கால்நடை வளர்ப்பு, கிணறு தோண்டுதல், ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், விவசாயப் பொருட்கள் உற்பத்திக்கான இதர உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு சிறு வியாபார மையங்களை ஏற்படுத்துதல் உட்பட நீர்நிலைகள், விவசாயம் சார்ந்தே ஏராளமான பணிகள், மேற்கண்ட திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டத்தைக் கண்காணிக்கவும் செயல்படுத்தவும் தேசிய, மாநில அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில அளவிலான ஒப்புதல் அளிக்கும் குழுவுக்கு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் தலைவராக இருக்கிறார். திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, செயல்படுத்துவது, கண்காணிப்பது இந்தக் குழுவின் பணி.

தேசிய அளவில் திட்டங்களை உருவாக்குவது, அங்கீகாரம் அளிப்பது, செயல்படுத்துவது, கண்காணிப்பது, பல்வேறு அமைச்சககங்களை ஒருங்கிணைத்து செயல்படுவது உள்ளிட்ட பணிகளை செய்யும் தேசிய செயல்பாட்டுக் குழுவுக்கு ‘நிதி ஆயோக்’(திட்டக் குழுவுக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு) அமைப்பின் துணைத் தலைவர் தலைவராக இருப்பார். அமைச்சககங்களுக்கு இடையிலான தேசிய வழிகாட்டுதல் குழுவுக்கு பிரதமர் தலைவராக இருப்பார்.

மேற்கண்ட திட்டத்தில் 2015 - 2020 ஆண்டு வரை ஐந்தாண்டுகளுக்கு மேற்கண்ட திட்டங்களுக்காக ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2015-16 நிதியாண்டில் தமிழகம் பெற்றுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? ஆயக்கட்டுப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகளுக்காக ரூ.201.587 கோடி பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த நீர் மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.750 கோடி பெற்றுள்ளது. சிறு பாசனத் திட்டங்களுக்காக 363.38 கோடி பெற்றுள்ளது. மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் நீர்நிலைகளை மேம்படுத்த இயந்திரங்களைப் பயன்படுத்துதல், பொருட்கள் வாங்குதல் ஆகியவற்றுக்காக ரூ.115 கோடி பெற்றுள்ளது.

நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்காக ரூ.387 கோடி பெற்றுள்ளது. திட்ட விரிவாக்கம், பிரச்சாரப் பணிகளுக்காக ரூ.32.218 கோடி பெற்றுள்ளது. திட்டங்கள் மற்றும் திட்ட அறிக்கைகள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.1.5 கோடி பெற்றுள்ளது. ஆக மொத்தம், நீர்நிலைகள் மற்றும் விவசாய மேம்பாடுகள் பணிகளுக்காக மேற்கண்ட திட்டத்தில் கடந்த ஓர் ஆண்டுக்கு மட்டும் சுமார் ரூ.1,865 கோடியைத் தமிழகம் பெற்றுள்ளது.

ஏற்கெனவே மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் பல்லாயிரம் கோடி நிதியைப் பெற்று தமிழகத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தினார்கள். அது போதாது என்று பிரதம மந்திரி வேளாண்மை மேம்பாடு திட்டத்திலும் கடந்த ஆண்டு ரூ. 1,865 கோடியில் பணிகள் செய்திருக்கிறார்கள். அதுவும் போதாது என்று இப்போது குடிமராமத்துத் திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

சரி, மேற்கண்ட திட்டங்களில் நடந்த வேலைகள் என்ன? எங்கெல்லாம் ஆயக்கட்டு நிலங்கள் மேம்படுத்தப்பட்டன? எங்கெல்லாம் விவசாயம் மேம்படுத்தப்பட்டது? எங்கெல்லாம் நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டன? எங்கெல்லாம் மழை நீர் சேகரிக்கப்பட்டது? முப்போகம் விளைந்த நெல்லும் கரும்பும் வாழையும் என்ன ஆயிற்று? அவற்றை விற்று செல்வந்தர்களான விவசாயிகள் எங்கே போனார்கள்? எங்கே போனது அந்தப் பணம்?

எங்கும் போகவில்லை, அதிகார வர்க்கத் தினரின் பண்ணை வீடுகளாகவும், சொகுசு பங்களாக்களாகவும், மலைவாசஸ்தல தோட் டங்களாகவும், வெளிநாட்டு தீவுகளாகவும், ஆடம்பர கார்களாகவும் வலம் வருவது எல்லாம் வேறொன்றும் இல்லை. விவசாயிகளான உங்கள் பணம்தான்.சாமானியர்களான உங்கள் பணம்தான்.

அது மட்டுமில்லை; இதோ இப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்களாகிய உங்களிடம் வரத் துடிப்பதும் அதே பணம்தான். தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கொன்று புதைத்த பாவப்பட்ட அந்தப் பணத்தைத் தொடலாமா?

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்