சென்னை அரசு மருத்துவமனையில் பாம்பு: நோயாளிகள் பீதி

By செய்திப்பிரிவு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாம்பு நடமாட்டம் காரணமாக நோயாளிகள் பீதியடைந்துள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத் தவிர புறநோயாளிகளாக தினமும் சுமார் 13 ஆயிரம் பேர் சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் எலி, பூனை மற்றும் நாய்கள் நடமாட்டத்தை தொடர்ந்து, தற்போது பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெறுபவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் அறை உள்ளது. இந்த அறையின் அருகில் உள்ள ஊழியர்கள் உடைமாற்றும் அறையில் கடந்த 21-ம் தேதி நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஊழியர்கள் அந்த பாம்பை பிடித்தனர். ஆனால் அடிபட்டத்தில் அந்தப் பாம்பு இறந்துவிட்டது. இந்நிலையில் சமையல் அறை அருகில் நேற்று முன்தினம் பிற்பகல் இறந்த நிலையில் இருந்த ஒரு பாம்பை ஊழியர்கள் கண்டுபிடித்து அகற்றினர்.

மருத்துவமனையில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதால், வார்டுகளில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெறுபவர்கள் பீதியடைந்துள்ளனர். குறிப்பாக சமையல் அறை அருகில் உள்ள வார்டுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பீதியுடன் காணப்படுகின்றனர்.

மருத்துவமனையில் தேவையற்ற மற்றும் பழுதடைந்த டேபிள், சேர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பல்வேறு இடங்களில் குப்பையாக போடப்பட்டுள்ளன. அந்த இடங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE