கல்வி உதவித்தொகை: அமைச்சர் உத்தரவு

ஆதிதிராவிடர் நல இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந.சுப்ரமணியன் தலைமையில், துறைசார்ந்த மற்றும் தாட்கோ தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் மாணவ மாணவியர்கள் முழுநேரம் தங்குவதை உறுதி செய்யவும், தரமான உணவு, விடுதிகளுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கட்டிடப் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும் இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. 2014-15-ம் ஆண்டுக்குரிய சுமார் ஆயிரம் கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகையினை உரிய மாணவ, மாணவியர்களுக்கு விரைவில் கிடைக்கும் வண்ணம், தொடர்புடைய, கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடம் தகவல்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதை நலத்துறை அலுவலர்கள் கண்காணிக்க அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் கண்ணகி பாக்கியநாதன், தாட்கோ மேலாண்மை இயக்குநர் ஆ.சுகந்தி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் எஸ்.சிவசண்முகராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE