கடத்தல் காடாக மாறிய கோடியக்கரை!

By கரு.முத்து

தங்கக்கடத்தலில் தொடர்ந்து ஈடுபடுவதாக வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையைச் சேர்ந்த ஆனந்த், அறிவழகன் என்ற இரண்டு பேரை இந்திய நிதியமைச்சகத்தின் உத்தரவின் பேரில் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த ஜூன் 15-ம் தேதி திருத்துறைப் பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி ஈசிஆர் சாலையில் வேகமாக சென்ற இன்னோவா காரை போலீஸார் தடுத்து சோதனை செய்தபோது, 21 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அத்தனையும் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த சுத்தமான கட்டித் தங்கம்.

கடந்த ஓராண்டில் பரவை, ஈசனூர், கொள்ளிடம், திருத்துறைப்பூண்டி, பட்டுக் கோட்டை ஆகிய ஐந்து இடங்களில் மடக்கப் பட்ட கடத்தல் தங்கத்தின் எடை 54 கிலோ.

எங்கிருந்து வருகிறது தங்கம்?

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து சர்வ தேசக் கடத்தல் கும்பலால் இலங்கைக்கு கடத்திவரப்படும் தங்கம், பின்னர் இந்திய கடல் எல்லை வரை வந்துவிடுகிறது. அங்கே போய் அவற்றை பெற்றுக்கொள்ளும் உள்ளூர் கடத்தல்காரர்கள், பின்னர் அவற்றை சாலை மார்க்கமாக சென்னைக்கு எடுத்துச் செல்கின்றனர். குறிப்பிட்ட நபர்களிடம் கடத்தல் தங்கத்தை ஒப்படைத்துவிட்டு, சன்மானத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

ஏன் கடல்வழி?

இந்திய விமான நிலையங்களில் பலத்த சோதனை நடத்தப்படுவதால், கடத்தல்காரர்கள் தங்களது முக்கிய கேந்திரமாக இலங்கையைத் தேர்வு செய்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தங்கத்தை கொண்டு வந்து, அங்கிருந்து கடல் மார்க்கமாக 18 கடல் மைல் தூரமுள்ள வேதாரண்யம் வழியாக தமிழகத்துக்குள் கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து அதி நவீன ஃபைபர் படகில் ஒரு மணி நேரத்துக்குள் வேதாரண்யம் கடல் பகுதிக்கு வந்துவிட முடியும். அதனால்தான் கடத்தல்காரர்கள் வேதாரண்யத்தை தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

போருக்குப் பிறகு கடத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் சண்டை நடந்தவரையில் கடத்தல் என்பதே இல்லை. அது முடிந்து அமைதி திரும்பிய நிலையில்தான் கடத்தல் தொடங்கியிருக்கிறது. போருக்கு முன்புவரை வேதாரண்யத்தில் பலபேர் இலங்கையுடன் தொடர்பில் இருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் கோடியக்காட்டைச் சேர்ந்த மிராசுதார் சண்முகம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், சிபிஐ விசாரணையின்போது மர்மமான முறையில் இறந்தார்.

இலங்கையில் போர் முடிந்த நிலையில், சண்முகத்தின் 24 வயது மகன் ஆனந்தை சிலர், கடத்தல் தொழிலுக்குள் இழுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், மற்றவர்களும் மெல்ல மெல்ல இந்த தொழிலில் இறங்க போட்டி அதிகமானது. ஆனந்த், அறிவழகன், கோவிந்தன் என பல குழுக்கள் உருவாயின. வாய்ப்பு கிடைக்காதவர்கள், அடுத்தவரை வருவாய் நுண்ணறிவுத் துறையிடம் போட்டுக் கொடுத்து சன்மானம் பெறுவதும் அதிகரித்தது. யாராவது காட்டிக் கொடுத்தால் மட்டுமே கடத்தல் பொருள் பிடிபடுகிறது.

போட்டியை தவிர்க்க அறிவழகன் மகளை தன் தம்பி அருளுக்கு, நிச்சயம் செய்துள்ளார் ஆனந்த். ஆவணியில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஏனோ நடக்கவில்லை. இந்நிலையில்தான் கோடியக்காட்டில் இருந்த ஆனந்தையும் தூத்துக்குடியில் இருந்த அறிவழகனையும் வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்தனர். கோவிந்தன் ஏற்கெனவே திருச்சி சிறையில்தான் இருக்கிறார்.

கடலோரப் பாதுகாப்பு என்னாச்சு?

“இந்திய கடற்படை முகாம்கள் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை ஆகிய இரண்டு இடங்களில் உள்ளன. கடலோர காவல்படை அலுவலகங்கள் நாகை, வேதாரண்யத்தில் உள்ளன. மத்திய சுங்கத் துறையினர் அலுவலகம் தோப்புத்துறையில் உள்ளது. இவை எல்லாமே அலுவலகங்களாக மட்டும்தான் இருக்கின்றன. அவர்களுக்குத் தேவையான எந்த வசதியும் கிடையாது. இதனால்தான் கடத்தலை தடுக்க முடியவில்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விஷயம். இலங்கையில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் இன்னமும் அப்புறப்படுத்தபடாமலே உள்ளன. இப்போது தங்கம் கடத்தி வருவோர் நாளை ஆயுதங்களைக்கூட கடத்தி வரலாம். அந்த ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கையில் சிக்கினால் என்ன ஆகும்” என்று கேள்வி எழுப்புகிறார் வேதாரண்யத்தை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன். இது அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல. தங்கத்தைப் போல ஆயுதங்களை கடத்திவந்தால்… தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறிதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்