மரண தண்டனையை ஒழிக்க பிரதமர் முன்வர வேண்டும்: திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை

By செய்திப்பிரிவு

இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கர்ப்பிணிப் பெண்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை உறுப்பு நாடுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 114 நாடுகளும், எதிராக 36 நாடுகளும் வாக்களித்தன. எதிர்த்து வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

மரண தண்டனையை முற்றிலுமாக சட்ட நூலில் இருந்து அகற்ற வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

மனிதநேயம் மற்றும் மனித உரிமை அடிப்படையில் 140 நாடுகள் தூக்கு தண்டனையை ரத்து செய் துள்ளன. ஆனால் இந்தியாவில் இன்னும் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படவில்லை. குற்றங்களை ஒழிப்பதற்கு தூக்கு தண்டனை தீர்வாகாது. அதற்கு மனமாற்றம் தேவை. பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி சிந்தித்து, மரண தண்டனையை சட்டநூலில் இருந்து அகற்ற முன்வர வேண்டும்.

கிரானைட் முறைகேடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மதுரை மாவட்டத்தில் சகாயம் குழு ஆய்வு செய்ய உள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்களிடம் மதுரை மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி, அபராதம் விதிக்க உள்ளார். அவ்வாறு அபராதம் விதிக்கப்பட்ட பிறகு, சகாயம் குழு அறிக்கை மூலம் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, ஆட்சியர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE