சிகிச்சையில் கடமை தவறும் டாக்டரை தண்டிக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம்
டாக்டர் ஈஸ்வரன் என்பவர், புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2010-ம் ஆண்டில் சேர்த்திருந்தார். எனினும் அவரது தந்தை 2012-ம் ஆண்டு இறந்துவிட்டார்.
தனது தந்தைக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் முறையாக சிகிச்சை அளிக்காமல் கடமையில் இருந்து தவறியதாகவும், அதனாலேயே தனது தந்தை இறந்தார் என்றும் கூறி அந்த டாக்டருக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சிலிலும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் ஈஸ்வரன் புகார் அளித்தார்.
தொழிலில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் குற்றங்களுக்குத்தான் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, இதுபோன்ற காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்க முடியாது என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கூறிவிட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் ஈஸ்வரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.கே.சசிதரன், "நோயாளிக்கான சிகிச்சையை சரியாகச் செய்யாமல் கடமை தவறும் செயலும் தொழில் சார்ந்த ஒழுங்கீனம்தான்" என்று தீர்ப்பளித்துள்ளார்.
தீர்ப்பு விவரம் வருமாறு: ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் ஒப்புக் கொள்ளும் வினாடியிலேயே அந்த டாக்டருக்கும் நோயாளிக்குமான ஒப்பந்தம் தொடங்கி விடுகிறது. தான் விரைவில் குணமடையும் விதத்தில் எல்லாவித முயற்சிகளையும் டாக்டர் மேற்கொள்வார் என நோயாளி முழுமையாக நம்புகிறார்.
ஆகவே, நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டியது டாக்டரின் கடமை. இதற்கு மாறாக, அளிக்க வேண்டிய சிகிச்சையை சரியாக அளிக்காமல் அலட்சியமாக இருந்து டாக்டர் கடமை தவறினால், தொழில் சார்ந்த ஒழுங்கீனத்துக்காக அவரை தண்டிக்கலாம்.
அதுபோன்ற நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் கூறுவது சரியல்ல. ஆகவே, மனுதாரரின் புகார் குறித்து சட்டப்படி பரிசீலித்து மருத்துவக் கவுன்சில் உரிய முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளார்.