ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சைகள் வெற்றி

தருமபுரி மாவட்டம் தொக்கம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முதாசிர் அராபத் (22). கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவர்.

கடந்த ஆண்டு இவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. தற்காலிகமாக டயாலிசிஸ் செய்து கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மூளைச்சாவு அடைந்த வரிடம் இருந்து ஒரு சிறுநீரகம் தானமாக பெறப்பட்டது. அந்த சிறுநீரகத்தை மாணவர் அராபத்துக்கு அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் பொருத்தினர். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கல்லீரல் மாற்று சிகிச்சை

சென்னை வடபழனியை சேர்ந்தவர் குணசேகரன் (51). புகைப்படக் கலைஞர். கல்லீரல் சுருக்க நோயால் பாதிக்கப்பட்ட இவர் மஞ்சள் காமாலை, வயிற்று வலி, வயிறு வீக்கம் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தார். மாற்றுக் கல்லீரலுக்காக காத்திருந்த இவர் ஸ்டான்லியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 1-ம் தேதி மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரலை, குணசேகரனுக்கு பொருத்த மருத்துவர்கள் திட்டமிட்டனர்.

கடந்த 2-ம் தேதி கல்லீரல் அறுவை சிகிச்சை துறை தலைவர் மனோகரன், மயக்கவியல் துறைத் தலைவர் லதா தலைமையில் 14 மருத்துவர்கள் 18 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர். குணசேகரனின் பழைய கல்லீரலை அகற்றிவிட்டு, தானமாக பெறப்பட்ட கல்லீரலை வெற்றிகரமாக பொருத்தினர்.

இத்தகவலை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் ஏஎல்.மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE