குழந்தைகள் பலியாகக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

தருமபுரி, சேலத்தில் பச்சிளம்குழந்தைகள் பலியாகக் காரணமான அ.தி.மு.க. அரசை வன்மையாக கண்டிப்பதோடு, இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிரச் சிகிச்சை பிரிவில் குறை பிரசவம், மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 14, 15ஆம் தேதிகளில் ஆறு பச்சிளம் குழந்தைகள் இறந்தன. அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஐந்து பச்சிளம் குழந்தைகள் 16 மற்றும் 17ஆம் தேதிகள் இறந்துள்ளன.

இவற்றைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆறு நாள்களில் எட்டு குழந்தைகள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

இது போன்ற துயரச் சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகள் இறப்பிற்குக் காரணம், அங்கே மருத்துவர் மற்றும் நர்ஸ்கள் இல்லாதது தான் என்று பெற்றோர் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

தர்மபுரி மருத்துவமனையின் "டீன்" குழந்தைகளின் சாவுக்கு சிகிச்சை குறைபாடோ, மருத்துவ உபகரணங்கள், ஊழியர்கள் பற்றாக்குறையோ காரணம் இல்லை, இந்த உயிரிழப்பெல்லாம் தவிர்க்க முடியாதது என்று அலட்சியமாகக் கூறியிருக்கிறார்.

நல்லவேளையாக இவ்வாறு கூறிய "டீன்" உடனடியாக மாற்றப்பட்டு, புதிய "டீன்" நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் உண்மையில், தர்மபுரி மருத்துவமனையில் 5 படுக்கைகள் மட்டுமே சுவாசக் கருவி வசதியுடன் உள்ளதாம்.

குழந்தைகள் பிரிவில் மருத்துவர்களும், செவிலியர் உள்ளிட்ட 2 பணியாளர்களும் போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறை டாக்டர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள், ஊழியர்கள் என 400 பணி இடங்கள் வரை காலியாக உள்ளதாம்.

இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ள 28 குழந்தைகளைக் கண்காணிக்க 2 செவிலியர்கள் மட்டுமே இருக்கிறார்களாம். இதில் ஆறு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாம்.

தற்போது சுமார் 20 உயிர்கள் போன பின்னர் தான், அரசு இதிலே தலையிட்டு, முதல் அமைச்சரே இன்று அது குறித்து அறிக்கை விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையிலும் சிகிச்சை குறைபாடு காரணம் இல்லை என்று அரசைக் காப்பாற்றுகின்ற முயற்சியிலே ஈடுபட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 400க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் பிரிவுக்குச் சிகிச்சைக்கு வந்துள்ளன. அதில் 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன. இதில் 95 சதவிகிதம் குழந்தைகள் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்ட குழந்தைகள். ஜுன் மாதம் சிகிச்சை பெற்ற 325க்கும் மேற்பட்ட குழந்தைகளில் 45க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன. அதில் 40 குழந்தைகள் வரை வென்டிலேட்டரில் வைக்கப்பட்டவை. ஜுலையில் சிகிச்சை பெற்ற 300 குழந்தைகளில் 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன. அதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டவை.

எனவே வெண்டிலேட்டர் சிகிச்சை தொடர்பாக சிறப்பு மருத்துவர்கள் தொடங்கி செவிலியர்கள் வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களே கருத்துக் கூறுகிறார்களாம். ஓரிரு குழந்தைகள் பாதிக்கப்பட்டவுடனேயே அரசு முறையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றியிருக்க முடியும்.

நாளிதழ்களில் தொடர்ந்து நான்கைந்து நாட்களாக தர்மபுரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சாவு என்ற செய்தி வந்த நிலையிலே கூட, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்றெல்லாம் பெற்றோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை நவீன மருத்துவமனையாக ஆக்கப் போவதாக கூறி, அதிலே காட்டுகின்ற அக்கறையை இதிலே தமிழக அரசு காட்டியிருக்க வேண்டாமா?

நீங்கள் யார் சொல்வதற்கு? நான் எதற்கு அதையெல்லாம் கேட்க வேண்டும்? எல்லாம் எனக்குத் தெரியும் என்ற எதேச்சாதிகாரப் பாணியிலே நடந்து கொண்டு, பச்சிளம்குழந்தைகள் சுமார் இருபது பேரின் சாவுக்குக் காரணமான அ.தி.மு.க. அரசை வன்மையாக கண்டிப்பதோடு, இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இனியும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாமல் இருக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மேலும் தாமதிக்காமல் எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE