உள்ளாட்சிகளில் முறைகேட்டை தடுக்க தீர்ப்பாயம்: தமிழகத்தில் புதிய அவசரச் சட்டம் அமல்

By செய்திப்பிரிவு

மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் முதல் கவுன்சிலர்கள் வரை, கமிஷனர் முதல் உதவியாளர் வரையிலான அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான சேவைக் குறைபாடுகள், முறைகேடுகள் குறித்து விசாரிக்க, மாநில உள்ளாட்சிக் குறை தீர்ப்பாயம் அமைக்க, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பிறப்பித்த அரசாணை வருமாறு:

உள்ளாட்சி அமைப்புகளில் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் அதிகார துஷ்பிர யோகத்தை தடுக்க, மாநில அளவில் உள்ளாட்சி குறை தீர்ப்பாயம் அமைக்கப்படுகிறது. இதன் தலைவராக அரசின் முதன்மைச் செயலர் அல்லது அதற்கு இணையான பொறுப் பிலுள்ளவர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுவர். இந்த குறை தீர்ப்பாயத் தலைவர் பதவி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பதவிக்கு இணையானதாகக் கருதப்படும்.

தமிழக முதல்வரின் பரிந்துரைப்படி, குறை தீர்ப்பாயத் தலைவர் ஆளுநரால் நியமிக்கப்பட்டு, ஆளுநர் முன் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக் கொள்வார். அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். குறை தீர்ப்பாய தலைவர் எப்போது வேண்டுமானாலும் தன் பதவியை ராஜினாமா செய்யலாம். ஆனால் அவரை பதவி நீக்க வேண்டுமென்றால், அதுகுறித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் கையெழுத்திட வேண்டும்.

இந்த குறை தீர்ப்பாளரிடம் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் புகார் அளிக்கலாம். கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர் முதல் மாநகராட்சி மேயர் வரையிலான உள்ளாட்சிப் பிரதிநிதிகள், உதவியாளர் முதல் மாநகராட்சிக் கமிஷனர் மற்றும் உள்ளாட்சி சார்ந்த அதிகாரிகள் மீது, முறைகேடுப் புகார்கள் இருந்தால் விசாரிக்க மனு அளிக்கலாம்.

உரிய ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்கள் அடிப்படையில் குறை தீர்ப்பாளர் மனுவை விசாரிக்கலாம். குற்றம் நிரூபிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கலாம். உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளில் பிரச்சினைகள் இருந்தால், அதனை மக்கள் நலன் சார்ந்து மாற்றுவதற்கு அரசுக்கு தீர்ப்பாயம் பரிந்துரை செய்யலாம்.

விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர் மீது, குற்ற விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அரசு மற்றும் சட்ட அமைப்புகளுக்கு பரிந்துரை அளிக்கலாம். தீர்ப்பாய விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அதன் மீது கிரிமினல் விசாரணை நடத்துவதற்கு போலீசுக்கு உத்தரவிட முடியும். குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு அபராதம் விதிக்க முடியும். அந்த அபராதத்தை உரிய காலத்தில் செலுத்தாவிட்டால், அதை சட்டப்படி பறிமுதல் செய்ய அரசுத் துறைகளுக்கு உத்தரவிட முடியும். விசாரணைக்கு எந்த அரசுத் துறை, போலீஸ் மற்றும் நீதிமன்றங்களிலிருந்தும் ஆவணங்கள் பெற்றுக் கொள்ள அதிகாரமுள்ளது.

விசாரணை தொடர்பாக சிவில் நீதிமன்றங்களைப் போல், சிவில் சட்ட நடைமுறைகள் 1908ன் படி, சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராகவும், ஆவணங்கள் தாக்கல் செய்யவும், சாட்சியம் அளிக்கவும், குறுக்கு விசாரணை நடத்தவும் சம்மன் அளிக்கலாம்.

மனு அளித்தவர் வேண்டு மென்றே பொய்ப் புகார் அளித் தது விசாரணையில் கண்டறியப் பட்டால், புகார் அளித்தவர் வழக்குச் செலவு செலுத்தவும், அறிவுரை, எச்சரிக்கை வழங்கவும் தீர்ப்பாயத்துக்கு உரிமை உள்ளது.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் குறை தீர்ப்பாயச் சட்டம் 2014 என்றழைக்கப்படும் இந்தச் சட்டப்படி, ஏற்கனவே நீதிமன்ற விசாரணையிலுள்ள பிரச்சினைகள், அரசால் விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து, தீர்ப்பாயங்கள் விசாரணை மனுக்களை ஏற்க முடியாது. அதேநேரம் அரசின் சார்பில் பரிந்துரைக்கப்படும் பிரச்சினைகள் குறித்து தீர்ப்பாயம் விசாரிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE