தமிழகத்தில் பழமையான சமணர் பள்ளிகள் பெரும்பாலும் மலைக் குகைகளில்தான் இருந்துள்ளன. சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டை அருகே அனுமந்தக் குடியில் உள்ள சமணர் பள்ளி, தென்தமிழகத்தின் ஒரே கட்டுமானப் பள்ளியாகத் திகழ்கிறது.
தமிழகத்தில் சங்க காலம் முதல் சமணர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏராளம் உள்ளன. கிபி 14-ம் நூற்றாண்டு வரை தென் தமிழகத்தில் சமணம் தழைத்திருந் தாலும், தற்போது அம்மதத்தைப் பின்பற்றுவோர் குறைந்துவிட்டனர். மலைக்குகைகள் தவிர பள்ளிகள் பெரும்பாலும் இடிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையத் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் பிரான்மலை, மகிபாலன்பட்டி, குன்றக்குடி, திருக்காளக்குடி, பூலாங்குறிச்சி, திருமலை, இளையான்குடி, அனுமந்தக்குடி பகுதியில் சமணர்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன. முற்காலத்தில் மதுரை மேலூர், திருமலை, குன்றக் குடி, அனுமந்தக்குடி, இடையமடம் வழியாக தொண்டிக்கு ஒரு பெருவழி இருந்துள்ளது. இவ்வழி களை பயன்படுத்திய வணிகர்கள் விருசுழி, பாம்பாற்றின் கரைகளில் கட்டிய சமணர் பள்ளிகள் வரலாற்றுச் சான்றாக உள்ளன. இதில் அனுமந்தக்குடியில் மட்டுமே முழுவதும், கருங்கற்களால் கட்டப் பட்ட சமணர் பள்ளி இன்றும் வழிபாட்டில் உள்ளது.
தேவகோட்டையில் இருந்து 10 கிமீ தொலைவில் சுந்தர பாண்டியன்பட்டினம் செல்லும் சாலையில் விருசுழி ஆற்றின் கரையில் அனுமந்தக்குடி உள்ளது. சமணர்களின் 23-ம் தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்கு இங்கு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மூலஸ் தானம், முன்மண்டபம், மகா சாத்தையா ஆலயம், பலி பீடம் உள்ளது. சேதமான பார்சுவநாதர் சிலைக்கு பதில், புதிய சிலை சில ஆண்டுகளுக்கு முன் நிறுவப் பட்டுள்ளது. பழைய சிலை முன் மண்டப வலது பக்கம் வைக்கப் பட்டுள்ளது. இங்கு தர்மதேவி இயக்கி, மகாசாத்தையா, காளி, கருப்பன், மாரியம்மன், கணபதிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
மூலஸ்தானத்தின் முன்புறம் மகா சாத்தையா உக்கிர கோலத்தில், கையில் சூலம் ஏந்திய நிலையில் காட்சி தருகிறார். இடது பக்கம் கைகூப்பி வணங்கிய நிலையில் சொக்கவணிகன் என்பவரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இவர் தொண்டியின் அரசராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தங்க வணிகராக இருந்திருக்கலாம். இவர் இக்கோயில் கட்டுவதற்குரிய நிலத்தை, பசுமாட்டின் ஒரு அடி மிதிக்கு 5 தங்க நாணயம் வீதம் விலை கொடுத்து வாங்கியதால், அடிமிதிகுடி என்ற பெயர் ஏற்பட்டதாகவும், பின் அனுமந்தக்குடி என மாறியுள்ளது.
கி.பி 4-ம் நூற்றாண்டுகால பழமையான இப்பள்ளி, கி.பி 1881-ல் விருசுழி ஆற்று வெள்ளத்தில் சேதமடைந்து, கி.பி 1885-ல் தற்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்றார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
கி.பி 7-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள சமண மற்றும் புத்த சமயம், விஹாரங்கள், மடாலயங்கள், அனைத்தும் மனிதப் பிறப்பில் ஏற்றத்தாழ்வு என்பதே இல்லை எனவும், உழைப்பே நமது மூலதனம் என்பதையும் வலியுறுத்தியதோடு தமிழ் மொழியையும், அதன் கலாச்சாரத்தையும் மேன்மைப்படுத்தவும், மக்களின் தொண்டை மகத்தானதாகவும் போற்றியதால் இச்சமயங்கள் எளிதில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதே காலத்தில் தோன்றிய சைவம் மற்றும் வைணவமும் சமண சமயத்தையும் புத்த விஹாரங்கள், மடாலயங்கள், பள்ளிகளை ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன. ஆனால், சமண சமயத்தின் எளிதான கருத்துகளால் விரைவாக அனைத்து மக்களையும் சென்றடைந்தது. மாறாக, சைவ, வைணவ மதங்கள் பிறமொழிகளான பாலி மற்றும் இதர மொழிகளை வளர்த்தெடுக்க பாடுபட்டதோடு, மக்களின் சமநிலையை வேரறுக்கவும், உழைப்பைச் சுரண்டவும், மூட நம்பிக்கையை விதைக்கவும் பாடுபட்டன. இதனால், அரசர்களின் ஆதரவைப் பெற்று பல்வேறு சதிச் செயல்களிலும் ஈடுபட்டன.
திருக்குறள், பதினெண்கீழ் கணக்கு போன்ற நீதி நூல்கள் சமண சமயத்தை சார்ந்ததே என்ற தகவல்களும் உண்டு. எனவே, நமது பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால், பல்வேறு சமண, புத்த சமய வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கும் என்பதற்கு, அனுமந்தக்குடி சமணப் பள்ளியும் ஓர் ஆதாரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago