நடிகர்களை நம்பி கட்சி நடத்தவில்லை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

பாஜக ஒருபோதும் நடிகர்களை நம்பி கட்சி நடத்தவில்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் திரையுலக பிரபலங்களை இழுக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகவும் நடிகர் ரஜினிகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், அரசியலுக்கு வருவது குறித்து தற்போது யோசிக்கவில்லை என்று ரஜினி கூறிவிட்டார். நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் காங்கிரஸில் இணைந்துவிட்டார்.

இதனால், தமிழகத்தில் திரையுலகி னர் பாஜகவை புறக்கணிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு நட்பு அடிப்படையில்தான் சென்றேன். அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்பீர்களா என்று நிருபர்கள் கேட்டால், வரவேற்போம் என்றுதான் சொல்ல முடியும். இதற்காக பாஜக அவரை இழுக்க முயற்சிக்கிறது என்று சொல்ல முடியாது. அதேபோல் நடிகை குஷ்புவிடம் கட்சிக்கு வரச்சொல்லி ஒருமுறைகூட நாங்கள் பேசவில்லை. அவரும் எங்களுடன் பேசவில்லை. தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளார். இதனால் நாங்கள் பலவீனமானர்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஒருவேளை, ‘குஷ்புவே புறக்கணித்துவிட்டார் அதனால் பாஜக பலவீனமானது’ என்று யாராவது சொன்னால் அவர்கள் அப்படியே சொல்லிக் கொள்ளட்டும்.

கடந்த மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சி என்பதால் தேமுதிக தலைவர் விஜயகாந்தை தவிர வேறு எந்த நடிகரும் தனிப்பட்ட முறையில் எங்களுக்காக பிரச்சாரம் செய்யவில்லை. அந்த தேர்தலில் குஷ்பு திமுகவில் இருந்தார். ஆனால், திமுக 39 இடங்களிலும் தோற்றது.‘பாஜகவில் சேர மிஸ்டு கால் கொடுங்கள்’ என்று ஒரு எண்ணை கொடுத்துள்ளோம். 20 நாட்களில் 1 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. எங்கள் லட்சியம் இளைஞர்களையும் பொதுமக்களையும் எங்கள் பக்கமாக இழுப்பதுதான். நடிகர்களை நம்பி கட்சி நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE