மழுங்கிப்போகும் ‘பேனா முனை’ தயாரிப்பு தொழில்: ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வால் நலிந்து வருகிறது

By செய்திப்பிரிவு

வாள் முனையைவிட பேனா முனை கூர்மையானது. எப்பேர்பட்டவர்களின் தலையெழுத்தையும் மாற்றியமைக்கும் வலிமைமிக்கது பேனா முனை... போன்ற வாசகங்களுக்கு உயிர் கொடுத்த பேனா ‘நிப்’ தொழில் இன்று ஆள் பற்றாக்குறையாலும், கூலி உயர்வு காரணமாகவும் நலிந்து வருகிறது.

எழுத்தாணி கொண்டு எழுதிய மனிதன், தொழில்நுட்ப வளர்ச்சியால் பேனாவைக் கண்டுபிடித்தான். கடந்த 50 ஆண்டுகளில், பேனாவின் பயன்பாடு அனைத்து நிலைகளிலும் அதிகமாகக் காணப்பட்டது. பேனாவில் தேய்மானம் என்பது அதன் நிப் மட்டுமே. நிப்பை மட்டும் மாற்றி தொடர்ந்து பேனாவை பயன்படுத்த முடியும். இதனால், பேனாவைவிட பேனா நிப் தேவை அதிகமாக இருந்தது.

250-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 1960-களில் 250-க்கும் மேற்பட்ட பேனா நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தென்னிந்திய அளவில் சாத்தூரில் மட்டுமே நிப் தொழிற்சாலைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1960-களில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு எவர்சில்வர் இறக்குமதி செய்யப்பட்டபோது, பேனா நிப் தயாரிப்புத் தொழிலுக்காக மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்கப்பட்டன. ஆனால், 10 ஆண்டுகளில் அந்த மானியம் நிறுத்தப்பட்டு விட்டது. அதன்பின்னர், எவர்சில்வர் பாத்திரங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டது போக எஞ்சிய தகடுகளை எடைக்கணக்கில் வாங்கிவந்து நிப் தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 1990களில் ‘லெட்’ மற்றும் ‘பால்பாயிண்ட்’ பேனாக்கள் வருகையால், மை (இங்க்) ஊற்றி பயன்படுத்தும் பேனாக்களின் பயன்பாடு வெகுவாகக் குறையத்தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் அனைத்துத் தரப்பினரும் இதுபோன்ற பால்பாயிண்ட் பேனாக்களையே அதிகம் பயன்படுத்தத் தொடங்கியதால், மை ஊற்றி பயன்படுத்தும் பேனாக்கள் இன்று ஓரம்கட்டப்பட்டுவிட்டன. இதன் விளைவு நிப் தயாரிப்புத் தொழிலும் முடங்கியது.

3 தொழிற்சாலைகள் மட்டுமே

250-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருந்த சாத்தூரில் தற்போது 3 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்நிலையில், கூலி உயர்வு கோரி கடந்த ஒரு மாதமாக தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் நிப் தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு குரோஸுக்கு ரூ.3 முதல் 5 வரை கூலி உயர்த்தப்பட்டு, திங்கள்கிழமை முதல் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

அரசின் சலுகைகள் இல்லை

இதுபற்றி, நிப் தொழிற்சாலை நடத்தி வரும் ஜி.ராமசாமி (77) கூறும்போது, “1962-ல் நிப் தொழிற்சாலையை தொடங்கினேன். ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், 1990-களில் பேனா மற்றும் நிப்புகளுக்கான தேவை குறைந்துவிட்டது. அரசு கொடுத்த மானியமும் நிறுத்தப்பட்டுவிட்டதால், இப்போது தொழில் நடத்துவதே சிரமமாக உள்ளது. குடிசைத் தொழிலில் வரும் இத்தொழிலுக்கு அரசின் எந்தவொரு சலுகையோ, வங்கிக் கடனுதவிகளோ கொடுக்கப்படுவதில்லை.

மொத்த விற்பனை செய்யும் வடமாநில வியாபாரிகளுக்கு, தற்போது ஒரு நிப் 25 முதல் 30 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதில் 5 பைசா மட்டுமே லாபம் கிடைக்கிறது. 10 பேர் வேலை செய்தால், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 7 ஆயிரம் நிப்புகள் தயாரிக்க முடியும். ஆனால், இங்கு கூலி குறைவு என்பதால், பலர் கட்டிட வேலைக்கும் மற்ற கூலி வேலைகளுக்கும் சென்றுவிடுகின்றனர். இதனால் தொழிலாளர் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. கூலி உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளதால், தற்போது சிலர் வேலைக்கு வருகின்றனர். ஆனாலும், 10 பேர் பார்க்க வேண்டிய வேலையை 4 பேரைக்கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. இதனால் உற்பத்தியும் குறைகிறது.

பேனா நிப் தொழில் புத்துயிர் பெறவும், இதை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வு பெறவும் வேண்டுமெனில், மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, மீண்டும் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் அனைவரும் மை (இங்க்) பேனாவில்தான் எழுத வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் மை பேனாவைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்தால் எங்களைப் போன்றோருக்கு வாழ்க்கை கிடைக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE