தமிழகத்தில் மத்திய அரசு - மாநில அரசுகள் இடையிலான உரிமைப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறோம். போராடுகிறோம். நல்லது! அதே சமயம் 3-வது அரசாங்கமான பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை முடக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவது குறித்து பேசுவதும் நல்லது. ‘உள்ளாட்சித் தேர்தலை நடத்தா விட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்’ என்று தமிழக அரசை எச்சரித்துள்ளது உயர் நீதிமன்றம். அதைப் பற்றி எல்லாம் தமிழக அரசு கவலைப் படுவதாகத் தெரியவில்லை.
மேற்கண்ட உள்ளாட்சித் தேர்தல் குளறுபடிகள் தொடர்பாக அடிப்படையாக சில கேள்விகளை எழுப்புகிறார் தகவல் அறி யும் உரிமைச் சட்ட ஆர்வலரான மணிவேல். “இன்று தேர்தல் தள்ளிப்போவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம் தமிழக அரசு சார்ந்த தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளே. உள்ளாட்சித் தொகுதிகள் மறு வரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை குறித்த தமிழக அரசு ஆணைக் குறிப்பு வெளியிடப்பட்ட பின்பு, சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். பொது மக்கள், அரசியல் கட்சியினர் இடஒதுக்கீடு, சுழற்சி முறை சரியாக இருக்கிறதா?
அதில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று தெளிவுப் பெற்ற பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும். புதிய இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்ட வழிமுறைகளில் தவறு ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல கால அவகாசம் தேவை. எனவே நீதிமன்றங்கள் தேர்தலுக்கான காலக்கெடு விதிக்கும் முன்பு புதிய இட ஒதுக்கீடு சம்பந்தமாக தமிழக அரசு ஆணைக் குறிப்பு வெளியிட காலக்கெடு விதிப்பதே சரியான தீர்வாக இருக்கும்.
தமிழக அரசு ஆணைக் குறிப்பு வெளி யிட்டு சில நாட்களுக்குள் தேர்தலையும் நடத்துவதன் மூலம் குறுகிய கால அவகாசத் தில் யாரும் நீதிமன்றம் சென்று விடக்கூடாது என்று நினைக்கிறது. அதனாலேயே உள்ளாட்சித் தொகுதிகள் மறு வரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை குறித்த தமிழக அரசு ஆணைக் குறிப்பு வெளியிடுவதில் கால தாமதம் செய்கிறது. ஏனெனில் நீதி மன்றங்கள் தேர்தல் தேதியில் மட்டுமே கவனத்தை செலுத்துகின்றன.
சட்டங்களும் உண்மைகளும்!
1994, 1995, 1996-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட உள்ளாட்சி தொடர்பான சட்டங்கள், சட்டத் திருத்தங்கள் உள்ளாட்சித் தொகுதிகள் வரையறை, இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறை (De-limitation, rotation and reservation of wards ) குறித்து கீழ்கண்டவாறு அறிவிக்கின்றன.
l வார்டுகள் இடஒதுக்கீடு பட்டியல் இன, பழங்குடியினருக்கான மக்கள் தொகை அடிப்படையில் இருக்க வேண்டும். உதாரண மாக 100 வார்டுகள் இருக்கிறது; அங்கு பட்டியல் இன, பழங்குடியினரின் மக்கள் தொகை 15 சதவீதம் என்று வைத்துக்கொண்டால் 15 வார்டுகள் அவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கியதில் மூன்றில் ஒரு பங்கினை பட்டியல், பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்.
l தொகுதி வாரியாக பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகை கணக் கிடப்பட்டு இறங்கு வரிசையின் அடிப் படையில் தொகுதி இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். உதாரணமாக மொத்தம் உள்ள 100 தொகுதிகளிலே பட்டியல், பழங்குடியினரின் மக்கள் தொகை அதிகமாக உள்ள 15 தொகுதிகள் முதலில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது 10 ஆண்டுகள் நீடிக்கும். 10 ஆண்டுகள் கழித்து பட்டியல், பழங்குடியினரின் மக்கள் தொகையில் அடுத்த நிலையில் உள்ள அடுத்த 15 தொகுதிகள் (மக்கள் தொகையின் விகிதாச் சாரம் மாறாமல் இருந்தால்) ஒதுக்கப்பட வேண்டும்.
l பெண்களுக்கான இட ஒதுக்கீடு மொத் தம் உள்ள 100 தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கான 33 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். அதில் பட்டியல் மற்றும் பழங்குடி பெண்களுக்கான இட ஒதுக்கீடான 5 தொகுதிகள் போக மீதம் 28 தொகுதிகள் பொதுவான பெண்களுக்கான தொகுதிகளாக ஒதுக்கப்பட வேண்டும். இந்த ஒதுக்கீடும் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் அதிகம் இருக்கும் முதல் 28 தொகுதிகளாக ஒதுக்கப்படும். இந்த ஒதுக்கீட்டுக்கும் சுழற்சி காலம் 10 ஆண்டுகள்தான். அடுத்த முறை இட ஒதுக்கீடு என்பது பெண்களின் மக்கள் தொகையின் இறங்கு வரிசைபடிதான் இருக்க வேண்டும். தற்போது இந்த இட ஒதுக்கீடானது பெண்களுக்கு 50 சதவீதம் என்று மாற்றப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு ஒரு அரசு வெளியிட்ட உத்தரவில் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நேரம் இல்லாததால் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே வார்டு எல்லை வரையறை, மறுசீரமைப்பு, இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறைகள் பின்பற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ளது என்ன?
முதன்முதலில் 1996-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டின்படி முதல் 33 சதவீதம் பெண்கள் பயன் அடைந்தனர். பெண்களுக்கு 10 ஆண்டுகள் சுழற்சி காலம் என்பதால் 2001-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு அது நீடித்தது. அடுத்த இட ஒதுக்கீடு 2006-ம் வருடம் மேற்கொள்ளபட்டு 2011-ம் ஆண்டு தேர்தலிலும் அதே இட ஒதுக்கீடு தொடர்ந்தது.
அதன்படி மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 66 வார்டுகள் பெண்களும், சுமார் 10 வார்டுகள் பட்டியல், பழங்குடியின ஆண்களும் ஏற்கெனவே அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் பயன் அடைந்தவர்களாவர். எனவே, மொத்த மக்கள் தொகையில் மீதம் உள்ள அனைத்து பொது ஆண்கள் வார்டுகளும் 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு சுழற்சியின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பொருந்தாத காரணங்கள்
அப்போதுதான் ஒவ்வொரு 30 வருடங் களுக்கும் ஒரு முழுமையான 100 சதவீத சுழற்சி இருக்கும். அதாவது எந்த ஒரு பொது ஆண்களுக்கான தொகுதியும் 5-வது முறையாக பொது ஆண்கள் தொகுதியாகவே தொடர சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால், கடந்த 2016 -ம் வருட தேர்தல் அறிவிப்பில் பொதுவான ஆண்களுக்கான வார்டுகள் 5-வது முறையும் பொதுவான ஆண்களுக்கான வார்டுகளாகவே தொடர்ந்தன. முக்கியமான குளறுபடிகளில் ஒன்று இது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே வார்டு எல்லை வரையறை, மறு சீரமைப்பு, இட ஒதுக்கீடு, சுழற்சிமுறை பின்பற்ற முடியும் என்று அரசு கூறியதை கூட நேரமில்லாமை, பணி நெருக்கடி, பணியாளர் பற்றாக்குறை ஆகியவற்றை காரணமாக ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், ஏற்கெனவே 20 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இடஒதுக்கீடு சுழற்சி முறை பின்பற்றபடாமல் இருப்பதற்கு இந்தக் காரணங்கள் பொருந்தாது. நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்கள் இதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு முறை எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு சுழற்சி முறை தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மட்டுமே (10 ஆண்டுகள் வீதம் மூன்று முறை) அதை பின்பற்ற வேண்டும். பின்பு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி புதிய இட ஒதுக்கீடு சுழற்சி முறை அமல்படுத்தப்பட்டால்தான் எந்த சட்ட சிக் கலும், குழப்பமும் வராது.
இடையிடையே எடுக்கப்படும் மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி தொகுதி வரையறை, இட ஒதுக்கீடு சுழற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் குழப்பமும், 1996-ம் வருடத்திய உள்ளாட்சித் தொகுதிகள் வரையறை, இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறை சட்டத்தைக் கடை பிடிக்க முடியாமல் சட்ட மீறல் நடக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
இடையில் 50 சதவீதம் பெண்களுக்கான ஒதுக்கீடு என்பதை பொது ஆண்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்து பிரித்து கொடுப்பதால் ஏற்கெனவே இருந்த இட ஒதுக்கீடு சுழற்சி முறை பாதிக்கப்படாமல் இந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்திவிட முடியும்” என்கிறார்.
- நாளையுடன் நிறைவடையும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago