‘தனுஷ்கோடி துயரத்தின் சாட்சியம்’ பி.ராமச்சந்திரன் காலமானார்

தனுஷ்கோடியில்1964- ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் புயலின்போது கடல் சீற்றத்தில் சிக்கிய ரயிலை அன்றைய தினம் அனுப்பிய, அப்போதைய ராமேசுவரம் ரயில் நிலைய அதிகாரி பி. ராமச்சந்திரன்(93) நேற்று சென்னையில் காலமானார்.

அவர் பணியாற்றும் காலத்தில், ராமேசுவரத்தைவிட்டு அவரை மாற்றக் கூடாது என்று மனு மீது மனு போட்டு 9 ஆண்டுகள் அந்த ஊரிலேயே தக்கவைத்திருந்தனர் உள்ளூர் மக்கள். அங்குள்ள மீனவ மக்களோடு அப்படியொரு நெருக்கமான உறவைப் பராமரித் தவர். தனுஷ்கோடியில் கடல் தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் ஏதும் இல்லாத சூழலில், ரயிலை அங்கு அனுப்பியவர், ரயில் கடலில் அடித்துச் செல்லப்பட்டபோது துடித்துபோனார்.

தனுஷ்கோடி ரயில் விபத்தில் இறந்தவர்கள் 115 பேர் என்றே நீண்ட காலமாக, அரசுத் தரப்பு குறைத்துச்சொல்லி வந்தது.அன்றைக்குப் பயணத்தில் டிக்கெட் எடுத்தவர்களின் எண்ணிக் கையையும் ரயிலில் சென்ற ஊழியர்களின் எண்ணிக்கை யையும் அடிப்படையாகக் கொண்டு, சொல்லப்பட்ட தகவல் இது. “ஆனால், உள்ளூர்காரர்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரயிலில் தினமும் செல்வார்கள்; அவர்கள் டிக்கெட் எடுக்கும் வழக்கம் அந்நாளில் இல்லை; அவர்களும் கடலில் அடித்துச் செல்லப்பட்டார்கள்” என்கிற உண்மையை ‘தி இந்து’வுக்கு ‘நீர் நிலம் வனம்’ தொடரில் அளித்த பேட்டியின் மூலமாக வெளிக்கொண்டு வந்தவர் ராமச்சந்திரன். மேலும், வரலாற் றுச் சிறப்புமிக்க பாம்பன் பாலம் கட்டுமானம், மறுசீரமைப்புப் பணிகளிலும் மீனவ மக்களின் பங்களிப்பை வெளிக்கொண்டு வந்தவர்.

ராமச்சந்திரனுக்கு பத்திரிகை யாளர் ஆர்.நடராஜன் உள்பட 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இன்று காலை அவருடைய இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE