நெல்லையில் இருந்து சேர்ந்தமரம் செல்லும் வழியெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்.. பேருந்துப் பயணத்தில் கூட "பார்த்தியாலே...நம்ம சுரேஷ் தங்கமான மனுசமுல்ல... ஊருக்கு நல்லது சொன்னவமுல்ல .. சின்ன பசங்க சேர்ந்து இப்புடி பண்ணிப்புட்டானுங்களே.. நல்ல நேர்மையா இருந்தவம்முல்லா.." என்று நெல்லை சீமையின் வெள்ளந்தி மனிதர்கள் அவர்களுக்குள் பரபரப்பு மாறாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சேர்ந்தமரம் பழைய காவல் நிலையத்தில் இறங்கினால் பொடிநடை போடும் தூரம்தான் சுரேசின் வீடு. கடந்த 10-ம் தேதி காலையில் பிச்சைக்கண்ணு, பிரபாகரன், டேனிஸ் என்ற மூன்று மாணவர்களின் வெறியாட்டத்தில் பலியான, இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி முதல்வர் சுரேஷின் வீடு அது. வீட்டு முன்னால் உறவினர்கள் கூடி நின்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் விலகாத அதிர்ச்சியுடன் நம்மிடம் பேசினார் சுரேஷின் சித்தி கலைச்செல்வி.
“சுரேஷ் எனக்கு மகன் முறை வரும். எப்பையும் ரொம்ப நேர்மையா இருப்பான். அதுக்கு அவனுக்கு கிடைச்ச பரிசுதான், இந்த மரணம்ன்னு தோணுது. குடும்பத்துல யாருகிட்டயும் ஒரு வார்த்தை சத்தமா பேசிக்கூட பார்த்ததில்லை... அவன் கோபப்பட்டும் எங்களுக்கு தெரியாது. சேர்ந்தமரம் அரசு உயர்நிலைப் பள்ளியில்தான், பத்தாம் வகுப்பு வரை படிச்சான். இப்போ அது மேல்நிலைப்பள்ளி ஆகிடுச்சு. பத்தாம் வகுப்பு படிச்சப்போ சுரேஷ்தான் பத்தாம் வகுப்புல ஸ்கூல் பர்ஸ்ட் வாங்குனான். இப்பவும் பள்ளிக்கூட போர்டுல சுரேஷ் பேரு இருக்கும். ஒவ்வொரு வருசமும் அவன் படிச்ச ஸ்கூலுல பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் முதலிடம் வாங்கும் பசங்களுக்கு 1000 ரூபாய் மேனிக்கு ஊக்கத்தொகை கொடுத்து உற்சாகப்படுத்துவான். வருசத்துக்கு 50 ஏழை பிள்ளைகளுக்கு சீருடை, பாடநூல்களை கொடுப்பான். வருசாவருசம் தீபாவளிக்கு 50-க்கும் மேற்பட்ட ஆசிரமங்களில் இருந்து நன்கொடை கேட்டு கடிதம் வரும். எல்லாருக்கும் தாராளமா கொடுப்பான். இதைப்பத்திக் கேட்டா ஏழை மக்களுக்கு சேவை செய்ற வாய்ப்பு எல்லாருக்கும் கிடைச்சுடாது சித்தின்னு சொல்லுவான்... அவனை போய்..." கண்ணீர் விட்டு கதறுகிறார் கலைச்செல்வி.
அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார் சுரேஷின் அத்தை விஜயராணி, ’’அவுங்க அப்பா கூட பிறந்தவ நான். ஆனாலும் என்னை சுரேஷ் அத்தைன்னு கூப்புட்டு தெரியாது. அன்பா அம்மான்னுதான் கூப்புடும். தென்காசி பக்கத்தில் உள்ள ஆய்க்குடியில் செயல்பட்டுவரும் அமர் சேவா சங்கத்துக்கும் நிதி கொடுப்பாரு. எங்க குடும்பத்துக்குன்னே பாரம்பரியமா ஊருக்குள்ள ஒரு மரியாதை உண்டு. சுரேஷின் தாத்தா ராமையா, சேர்ந்தமரம் பஞ்சாயத்து தலைவரா இருந்தாங்க. காமராஜரே இந்த வீட்டுக்கு வந்திருக்காரு. ராமையா தாத்தா காங்கிரஸ் கட்சியிலும் ஜில்லா போர்டு தலைவரா இருந்தாங்க. சேர்ந்தமரம் கூட்டுறவு வங்கியிலும் தலைவரா இருந்தாங்க. சுரேஷின் தாத்தா காலத்துலதான் இங்க துவக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளியெல்லாம் வந்துச்சு.
எப்போதுமே என்கிட்ட படிக்குற மாணவர்கள் எல்லாரையும் முன்னுக்கு கொண்டு வருவேன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. ஒரு விசேச வீட்டுக்கு வந்தாகூட பிள்ளைகள் படிப்பை பத்திதான் பேசிட்டே இருப்பாங்க. அதுக்காகவே திருநெல்வேலி பாளையங்கோட்டை, ரகுமத் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தாங்க. குழந்தை பிறந்து 3 மாசத்திலேயே கருத்து வேறுபாட்டால சுரேஷின் மனைவி பிரிஞ்சு போயிட்டாங்க. அப்போ இருந்தே அவரு பொண்ணு அக்ஷயாதான் உலகம்ன்னு வாழ்ந்த மனுசன். பலதடவை இரண்டாவது திருமணம் பண்ண சொல்லியும் அக்ஷயாவுக்காக வேண்டாம்ன்னு சொல்லி மறுத்துட்டாங்க.
சுரேஷுக்கு கடவுள் பக்தி அதிகம். போன புரட்டாசி சனிக்கிழமைக்கு கூட அக்ஷயாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு வந்திருந்தாங்க. சனிக்கிழமை நாள் பூரா கோவிலில் ஓடுச்சு. ஞாயிற்றுக் கிழமை காலையில் நிறைய படிக்கனும்ன்னு கிளம்பி போயிட்டாங்க. ஆனால் இந்த சனிக்கிழமைக்கு…? செமஸ்டர் லீவு அப்பவும் பிள்ளைங்க, படிப்புன்னு அதை சுற்றியே அவரு மனசு சுத்திட்டு இருக்கும். எப்பவும் ஸ்டூடண்ட்ஸ் பத்தியே சிந்திச்சுட்டு இருப்பான். இப்போதான் திருநெல்வேலியில் சொந்தமா ஒரு வீடு கட்டுனான். 25-ம் தேதி புதுமனை புகுவிழாவுக்கு நாள் குறிச்சவனுக்கு..பால் ஊத்த வைச்சுட்டாங்க பாவிப்பசங்க.." என்று தேம்பி,தேம்பி அழுதார்.
கனத்த இதயத்தோடு கிளம்ப எத்தனிக்கையில் நம் கைபற்றிக் கொண்ட சுரேஷின் மகள் அக்ஷயா, "அங்கிள்… அப்பா படின்னு சொன்னதால கொன்னுட்டாங்களாமே.. ஏன் அங்கிள் இப்படி பண்ணுனாங்க? எனக்கு அம்மா, அப்பா இரண்டுமே என் அப்பாதான். இப்போ எனக்கு யாரு இருக்கா?" என்று கேட்ட அந்த சின்னஞ்சிறு குழந்தையின் முகம் ஏனோ இன்னும் நெஞ்சை வீட்டு நீங்க மறுக்கிறது.
தமிழகம் முழுவதும் 21-ம் தேதி வேலைநிறுத்தம்.....
குமரி மாவட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் சேர்ந்து சுரேஷ் படுகொலையை கண்டித்தும், கல்லூரி பாடத்திட்டத்தில் பண்பாட்டு கல்வியை சேர்க்க வலியுறுத்தி பேரணி நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவர்கள் கொடுத்த மனுவில் சுரேஷின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு சுரேஷின் படுகொலையை கண்டித்து வரும் 21-ம் தேதி வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டு கடன் முடியல....
சுரேஷ் வீடு கட்டுவதற்காக வாங்கி இருந்த வங்கி கடன் லட்சங்களில் இருக்கிறது. அக்ஷயாவின் எதிர்காலமும் கேள்விக்குறியாய் இருக்கிறது. அரசும், கல்லூரி நிர்வாகமும் வழங்கும் நிவாரணமே, அவரது குடும்பத்தின் மன ரணத்தை ஓரளவாவது ஆற்றும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago