முதல்வர் ஜெயலலிதாவுடன் அற்புதம்மாள் சந்திப்பு

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பேரறிவாளனின் தாயார் அற்புதம் மாள் நேற்று சந்தித்து பேசினார். அப்போது “அழாதீங்கம்மா, அதான் உங்களுடைய மகன் விடுதலையாகி திரும்ப வரப்போகிறாரே” என்று முதல்வர் அவருக்கு ஆறுதல் கூறியதாக அற்புதம்மாள் தெரிவித்தார்.

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய முடிவெடுத்தது பற்றி முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவிப்பு வெளியிட்டார். முதல்வரின் அறிவிப்பால், 7 பேரின் உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

அதன்பின், தலைமைச் செயலகத்தில் அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:

எந்த குற்றமும் செய்யாத என் மகன் பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்த செய்தியை டிவியில் பார்த்தேன். முதல்வரின் அறிவிப்பால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு தாயின் உணர்வுகளை அறிந்து, தாயுள்ளத்துடன் செயல்பட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்தேன்.

முதல்வரை சந்தித்தபோது நான் கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். என்னுடைய கையை பிடித்த முதல்வர், “அழாதீங்கம்மா. அதான் உங்களுடைய மகன் விடுதலையாகி திரும்ப வரப்போகிறாரே” என்று ஆறுதல் கூறினார்.

என்னுடைய மகனை எப்போது பார்க்க போகிறேன் என்ற ஏக்கத்தில் இருந்தேன். முதல்வரின் அறிவிப்பால், என் மகன் விடுதலையாகி வரப் போகிறான் என்பதை நினைக்கும்போது, மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மகனின் விடுதலைக்காகவும். தூக்குதண்டனையை எதிர்த்தும் போராடிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், நீதிபதிகள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மகன் மட்டும் அல்ல, அனைவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும். மனித நேயம், காந்தியம் பேசும் நமது நாட்டில் தூக்குத்தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

என் மகன் மட்டும் அல்ல, அனைவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும். மனித நேயம், காந்தியம் பேசும் நமது நாட்டில் தூக்குத்தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE