பாஜகவுடன் திமுக கூட்டணி சேர ஜெயலலிதாதான் காரணம்: கருணாநிதி

By செய்திப்பிரிவு

பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்துக் கொண்டதற்குக் காரணமே ஜெயலலிதாதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, ‘கருணாநிதி கர சேவைக்கு எதிரான கொள்கை உடையவர் என்றால் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்’ என்று கேட்டுள்ளார். கரசேவை நடந்தது 1992-ல். பாஜவுடன் திமுக கூட்டணி வைத்துக் கொண்டது 1999-ம் ஆண்டு. ஏழு ஆண்டுகள் கழித்து பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது என்றால் அதற்குக் காரணம் யார்?

1998-ம் ஆண்டு பாஜக அரசில் பங்கு பெற்ற அதிமுக, தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார். அதை பாஜக நிறைவேற்றாததால் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டார். அதனால் பாஜக அரசு கவிழ்ந்தது. இந்நிலையில்தான் 1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கும் சூழல் உருவானது. அதேநேரத்தில் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற உத்தரவாதத்தோடுதான் பாஜகவுடன் திமுக கூட்டணி சேர்ந்தது.

1992-ல் டெல்லியில் நடந்த ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ‘கரசேவையை அனுமதிக்கும்படி நீதிமன்றங்களை அணுகத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்தியுள்ள இடத்தில் கரசேவை நடக்கத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்.

கரசேவையை ஆதரித்தது யார், ஆட்களை அனுப்பியது யார் என்ப தெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதை நான் விளக்கத் தேவையில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE