பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது: ஜி.கே.வாசன்

By செய்திப்பிரிவு

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம் என்று புதிய கட்சி தொடங்கியுள்ள ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியின் கொடியை சென்னையில் நேற்று அறிமுகம் செய்து வைத்து வாசன் பேசியதாவது:

திருச்சியில் வரும் 28-ம் தேதி நடக்கும் கட்சி அறிமுக மாநாடு, தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும். மாநாட்டையொட்டி, நாளை (இன்று) காலை கிண்டியில் ராட்சத பலூன் பறக்கவிடப்படும். மாநாடு முடிந்த பிறகு, அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் கலந்து பேசிவேன். தொண்டர்கள், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வாறு நிர்வாகிகள் நியமித்து அறிவிக்கப்படும். இவ்வாறு வாசன் பேசினார்.

பின்னர் நிருபர்களின் கேள்விக ளுக்கு பதிலளித்து அவர் கூறிய தாவது:

திருச்சி மாநாட்டில் கட்சியின் புதிய நிர்வாகிகள் விவரம் அறிவிக்கப்படுமா?

திருச்சியில் மாநாடு முடிந்த பிறகு, கட்சியின் அனைத்து தலைவர்களும் கலந்துகொள்ளும் கூட்டம் நடக்கும். அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர். கட்சியில் உள்ள அனைவரும் ஏற்கத்தக்க வகையில் புதிய நிர்வாகிகள் தேர்வு அமையும்.

கட்சியின் லட்சியம் என்ன?

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதே எங்களது லட்சியம். இதில் மிகவும் தெளிவான சிந்தனையுடனும், வெளிப்படையாகவும் உள்ளோம்.

திருச்சியில் மாநாடு பற்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளாரே?

விமர்சனம் செய்பவர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. தூற்று வோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும். எங்கள் பணி, மக்கள் பணி செய்வதே.

பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். அவர்களது கொள்கை, லட்சியம் வேறு. எங்களது அரசியல் பாதை வேறு.

திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா?

தேர்தல் வரும்போது அதுபற்றி பார்க்கலாம். இப்போதுதான் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. பட்டி, தொட்டியெல்லாம் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டி உள்ளது. எனவே, கூட்டணி பற்றி பிறகுதான் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு வாசன் பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE