முத்தரப்பு கமிட்டி, இலவச ஜிபிஎஸ் மீட்டர் கோரி ஆட்டோ தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும், இலவச ஜிபிஎஸ் மீட்டர் விரைவில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் ஓடும் ஆட்டோக் களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உடனடியாக அம லுக்கு வந்தது. ஆனால், சமீபத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்ய தொடங்கியதால், போக்குவரத்து போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை இணைந்து சோதனை செய்து அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களை பறிமுதல் செய்து வருகின்றன.

அதன்படி, சுமார் 1,300 ஆட்டோக் களுக்கு அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. மேலும், 450 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.மகேந்திரன், ஆட்டோ சம்மேளன மாநில தலைவர் எம்.சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில், 1,500 ஆட்டோ தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக சிஐடியு நிர்வாகி மனோகரன் கூறுகையில், ‘‘ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும், டிஜிட்டல் மீட்டரை விரைவில் வழங்க வேண்டும், விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், ஆட்டோவுக்கான எரிபொருளுக்கு மானியம் வழங்க வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

இதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

எங்களின அடுத்த கட்ட முடிவு குறித்து எங்களின் மூத்த நிர்வாகிகளுடன் கூடிப் பேசி, அறிவிப்போம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE