சவாலான வழக்குகளுக்கு விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்: செங்கல்பட்டு விழாவில் ஆந்திர ஆளுநர் வலியுறுத்தல்

சவாலான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க நீதிபதிகள் முன்வர வேண்டும் என்று செங்கல்பட்டு பார் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 66-வது சட்ட நாள் விழாவில் ஆந்திர ஆளுநர் நரசிம்மன் யோசனை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல் பட்டு பார் அசோசியேஷன் சார்பில் 66-வது சட்ட நாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் ஆளுநர் நரசிம்மன் பேசியதாவது: நாட்டுக்கு சவாலாக உள்ள வழக்குகளை, விரைவாக விசாரித்து தீர்ப்புகள் வழங்க நீதிபதிகள் முன்வரவேண்டும். மேலும், அரசு மூலம் செயல்படுத்தப்படும் மேம்பாட்டு பணிகளுக்கு தடை கோரி நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளுக்கு, நீதிமன்றங்கள் இடைக்காலத் தடை விதிக்கக் கூடாது. இதன்மூலம் மேம்பாட்டுப் பணிகளை விரைவாக முடிக்க முடியும். பொதுமக்களும் மகிழ்ச்சியடைவர். மேலும், நீதிமன்றங்களின் மேல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். சவாலான வழக்குகளில் துணிந்து தீர்ப்பு அளிக்க நீதிபதிகள் முன்வரவேண்டும் என்றார்.

பின்னர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் பேசியதாவது: உயர் நீதிமன்றங்களில் பெரும்பாலான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE