முழு அடைப்புக்கு அதிமுக, கம்யூனிஸ்ட் ஆதரவு தேவை: தஞ்சாவூரில் வைகோ பேட்டி

By செய்திப்பிரிவு

காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ.22) நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆதரவு அளிக்க வேண்டும் என தஞ்சையில் மதிமுக பொதுச் செயலர் வைகோ கேட்டுக் கொண்டார்.

நேற்று வைகோ செய்தியாளர் களிடம் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு பிரச்சினை யால் 85 லட்சம் மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலையும் 2.5 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி பாதிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. அதிமுக அரசு முறையாக நீதிமன்றத்தை அணுகியதால் முல்லைப் பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டது.

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் எதை யும் கர்நாடக அரசு மதிப்பதில்லை. உபரி நீரை மட்டுமே கர்நாடகம் திறந்து விடுகிறது. இதையும் தடுக்கும் விதமாக, காவிரியின் குறுக்கே, 2 புதிய அணைகள் மட்டுமன்றி, மேலும் 5 தடுப்பணை களை கட்டத் தயாராக உள்ளது. இந்த அணைகள் கட்டினால் எதிர் காலத்தில் தமிழகத்துக்கு தண்ணீரே கிடைக்காது.

காவிரியில் தண்ணீர் வர வில்லை என்றால் தமிழகத்தில், 12 மாவட்டங்களில் சாகுபடிக்கும், 5 கோடி மக்களுக்கு குடிநீரும் கிடைக்காது. டெல்டா மாவட்டங் கள் ஏற்கெனவே மீத்தேன் வாயு திட்டத்தால் பாலைவனமாகும் சூழலில் உள்ளது.தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும், இதுபோன்ற பிரச் சினைகள் வரும்போது ஒன்றுபட்டு போராட வேண்டும். அதனால், இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.

மத்திய அரசு, காவிரியில் புதிய அணைகள் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது. சுற்றுசூழல், வனத்துறை என்று யாரிடமும் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு ஏற்கெனவே கபினி, ஹேரங்கி போன்ற அணைகள் கட்டியபோது தமிழகம் தட்டிக் கேட்கத் தவறி விட்டது. தற்போது எல்லோ ரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

காவிரியில் புதிய அணைகள் கட்டுவதை தடுக்கத் தவறினால், தமிழ்நாட்டுக்கு டெல்லி தலைமை தேவையில்லை. எனவே, கர்நாடகத்தின் அத்துமீறலை பிரதமர் தட்டிக்கேட்க வேண்டும். தமிழகத்துக்கு நீதி வழங்க வேண்டும் என்றார் வைகோ.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE