ரூ.4.5 கோடி மதிப்பு நிலம் அபகரிப்பு: வன்னியர் சங்க நிர்வாகி கைது

கிருஷ்ணகிரியில் போலி பத்திரம் தயாரித்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் வன்னியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி அருகேயுள்ள வெலகல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. விவசாயி. இவருக்கு பொம்மைப் பள்ளி என்ற இடத்தில் 9 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை கோவிந்தசாமி கடந்த 2005-ம் ஆண்டு மத்தூரைச் சேர்ந்த பன்சல்ரகுமான் என்பவரது மகன் கலீல் என்பவருக்கு விற்பனை செய்தார்.

இந்நிலையில், கிருஷ்ண கிரியை அடுத்த மோட்டூரைச் சேர்ந்த, வன்னியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் புல்லட் கணேசன் என்பவர், கலீலுக்குச் சொந்தமான நிலத்தை தனது மனைவியின் பெயரில், கோவிந்தசாமியிடம் இருந்து வாங்கியதுபோல் போலி பத்திரம் தயாரித்து பத்திரப் பதிவு செய்துள்ளார்.

இதனையறிந்த கலீல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மாளிடம் புகார் அளித்தார். இதையடுத்து நில அபகரிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.

புல்லட் கணேசன், போலி பத்திரம் தயாரித்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் புல்லட் கணேசனை நேற்று முன்தினம் இரவு கைது செய்து ஓசூர் கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், அவரது மனைவி சித்ரா, உறவினர் ராதா, ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சர்வேஸ்வரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE