மு.க.ஸ்டாலின் - செல்லூர் கே.ராஜு ‘நேருக்கு நேர்’ - மதுரை பூங்காவில் நடைபயிற்சியின்போது நடந்தது என்ன?

மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் திமுகவின் ஆய்வுக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கடந்த 19-ம் தேதி மதுரை வந்தார். சங்கம் ஓட்டலில் தங்கியிருந்தபடி, தினமும் ஒவ்வொரு ஊராகச் சென்று கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

காலை நேரத்தில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கமுள்ள மு.க.ஸ்டாலின், நேற்று அதிகாலை மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள சுற்றுச்சூழல் பூங்காவுக்குச் சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது, அதே பூங்காவின் மற்றொரு பகுதியில் மதுரை மாநகர் அதிமுக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தனது மனைவியுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராமல் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும் நேருக்கு நேராகவும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் இரு தரப்புக்கும் திடீர் அதிர்ச்சி ஏற்பட்டது.

அப்போது, திமுகவினர் அமைச்சரைப் பார்த்து கும்பிட்டு நலம் விசாரித்ததாகவும், பதிலுக்கு அமைச்சர் புன்னகைத்ததாகவும் தகவல்கள் வெளியானது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திமுகவினரிடம் கேட்டபோது, ‘நேற்று காலை சுற்றுச்சூழல் பூங்காவுக்கு வாக்கிங் சென்றார். எதிரே திடீரென செல்லூர் கே.ராஜூ வந்ததை கண்டதும் தளபதி அவருக்கு வணக்கம் சொன்னார். பதிலுக்கு வணக்கம் வைத்த அமைச்சர், ஸ்டாலினைப் பார்த்ததும் பதறியடித்து, தலை குனிந்தபடி வேறு திசையில் நடக்கத் தொடங்கிவிட்டார்’ என்றனர்.

இதுபற்றி அமைச்சர் தரப்பினரி டம் கேட்டபோது, ‘அமைச்சர் தினமும் இந்த பூங்காவில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று காலை அமைச்சர் பூங்காவில் நடந்து சென்றபோது எதிரே வந்து கொண்டிருந்த திமுக மாவட்ட பொறுப்பாளர் தளபதி, அமைச்சரைப் பார்த்து வணக்கம் தெரிவித்துள்ளார். அப்போது, தளபதிக்கு பின்னால் மு.க ஸ்டாலின் வந்து கொண்டிருந்ததை கண்டதும் அமைச்சர் உடனே வேறு திசையில் திரும்பி நடந்து சென்றுவிட்டார். திமுகவினரைப் பார்த்து அமைச்சர் வணக்கம் சொல்லவும் இல்லை, புன்னகைக்கவும் இல்லை. வேண்டுமென்றே சிலர் இதுபோல கிளப்பிவிடுகின்றனர்’என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE