சென்னையில் அதிமுக, திமுக பிரமுகர்கள் வெட்டி கொலை

கே.கே.நகரில் அதிமுக பிரமுகரும், சூளைமேட்டில் திமுக பிரமுகரும் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

அதிமுக பிரமுகர் கொலை

சென்னை கே.கே.நகர் சூளைப்பள்ளம் பல்லவன் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன்(38). சூளைப்பள்ளம் அதிமுக வட்ட நிர்வாகி. இவரது தங்கை அமுதாவிற்கும், வரதன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து கணவனை விட்டு பிரிந்த அமுதா தனியாக வசித்து வருகிறார். இதனால் விஸ்வநாதனுக்கும் வரதனுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. விஸ்வநாதனை கொலை செய்வதற்காக வரதன் இரண்டு முறை முயன்றும் தோல்வி அடைந்து விட்டார். இந்நிலையில் விஸ்வநாதனை கொலை செய்வதற்காக புதிதாக கத்தி வாங்கி வைத்திருந்த வரதனை கே.கே.நகர் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

அமுதாவை பிரிந்த வரதன், சசிகலா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். விஸ்வநாதன் கொடுத்த புகாரின்பேரில் வரதன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதால், விஸ்வநாதன் மீது சசிகலாவிற்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் விஸ்வநாதனை கொலை செய்ய திட்டம் தீட்டினார் சசிகலா. இதற்காக கூலிப்படையை சேர்ந்த தணிகாசலம் என்பவருக்கு பணம் கொடுத்து விஸ்வநாதனை கொலை செய்யக் கூறியிருக்கிறார் சசிகலா.

நேற்று மாலையில் வீட்டருகே உள்ள லட்சுமி தியேட்டர் அருகே விஸ்வநாதன் நடந்துவந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த தணிகாசலம் உட்பட 3 பேர் விஸ்வநாதனை அரிவாளால் வெட்டினர். இதில் கழுத்து, தலை என உடல் முழுவதும் வெட்டுக்கள் விழுந்து சம்பவ இடத்திலேயே விஸ்வநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தணிகாசலம், சசிகலா மற்றும் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திமுக பிரமுகர் கொலை

சென்னை சூளைமேடு நமச்சிவாயம் நகரை சேர்ந்தவர் வேலியப்பன்(87). திமுக பிரமுகர். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். ஆனால் மனைவி இறந்த நிலையில் வேலியப்பன் தனியாகவே ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவர் வசிக்கும் வீட்டின் மாடியில் இரண்டு வீடுகளை கட்டி வாடகைக்கும் விட்டிருக்கிறார். இவரது பிள்ளைகள் அனைவரும் அருகருகேதான் வசிக்கின்றனர். நேற்று மதியம் மருமகள் யமுனா, வேலியப்பனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சென்றார். பின்னர் சிறிது நேரத்திற்கு பின்னர் சாப்பாடு பாத்திரங்களை எடுப்பதற்காக அவர் திரும்பி வந்தபோது, கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வேலியப்பன் இறந்து கிடந்தார்.

அவர் அணிந்திருந்த 3 சவரன் செயின், தலா 1 சவரனுள்ள 2 மோதிரங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. சூளைமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட வேலியப்பனுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சொத்து தொடர்பான பிரச்னையில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை யாளிகளை பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE