பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட விநாயகருக்கு ராமநாதபுரம் அருகே 100 ஆண்டு முன்னரே கோயில் கட்டி வழிபாடு

By எஸ்.முஹம்மது ராஃபி

பர்மாவிலிருந்து கடல் பயணத்தின் போது வழித்துணையாக கொண்டு வரப்பட்ட விநாயகருக்கு ராமநாதபுரம் அருகே 100 ஆண்டு முன்னரே கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழர்கள் கடல் கடந்து சென்று வியாபாரம் செய்யும் காலத்தில் தங்களின் வழித்துணையாக விநாயகர் உருவத்தை எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்துச்சென்ற விநாயகர் சிலைகளைக் கொண்டே அவர்கள் சென்ற நாடுகளில் கோயில் கட்டியுள்ளனர். இதனால் விநாயகர் வழிபாடு பரவலாக உலகம் முழுவதும் பல நாடுகளில் காணப்படுகிறது. மேலும் பிற்காலச் சோழர் காலத்தில் விநாயகர் வழிபாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பரவியது.

நேபாளம், தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகள் வெளியிட்ட தபால் தலையில் விநாயகர் உருவம் உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்தோனேஷியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகர் உருவம் அச்சிடப்பட்டுள்ளது.

பர்மா தொடர்பு

சங்ககாலம் முதல் தமிழர்கள் மியான்மருடன் (பர்மா) வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர். மியான்மரில் விநாயகரை மகாபைனி என்கிறார்கள். கி.பி.1800களில் தான் அதிக அளவில் தமிழ்நாட்டில் இருந்து கூலி வேலைக்காகவும் வணிகத்துக்காகவும் பர்மாவிற்கு தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் பர்மாவில் கி.பி. 1860 இல் முதல் கோயில் சித்தி விநாயகர் கோயிலும் கட்டப்பட்டது.

இந்நிலையில் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் வே.ராஜகுரு, செயலாளர் காளிமுத்து, ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப் பாண்டியன் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமக் கோயில்கள் பற்றிய களஆய்வின்போது, மேலக்கன்னிசேரி கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை விநாயகர் சிலையைக் கொண்டு கோயில் அமைத்து இருப்பதைக் கண்டறிந்தனர்.

இது பற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது, ''ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன் மியான்மர் நாட்டில் வணிகம் செய்யச் சென்றுள்ளனர். பர்மாவில் இப்பகுதி மக்கள் அதிக அளவில் இருந்ததால் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆள்சேர்க்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பர்மா சென்றுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பர்மாவில் இருந்த பலர் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்துள்ளனர்.

முதுகுளத்தூர் அருகே மேலகன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை பர்மா சென்று வணிகம் செய்துவிட்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சொந்த ஊருக்கு திரும்பி வருவது வழக்கமாக இருந்துள்ளது. மேலும் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர்களும் தங்கள் இறுதி காலத்தில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். தற்போதும் இவ்வூரைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் மியான்மரில் வசிக்கிறார்கள். 1960களில் மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்டபோது இவ்வூரைச் சேர்ந்த பலர், இந்தியா திரும்பி கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் குடியேறியுள்ளனர்.

மேலகன்னிச்சேரியில் இருந்து வணிகம் செய்ய பர்மாவுக்குச் சென்ற பெருமாள் என்பவரின் குடும்பத்தினர் நூறு ஆண்டுகளுக்கு முன் பர்மாவில் இருந்து திரும்பி வந்தபோது கடல் பயணத்திற்காக வழித்துணையாக வெள்ளைப் பளிங்கால் வார்க்கப்பட்ட விநாயகர் சிலையை கப்பலில் கொண்டு வந்துள்ளனர். இவ்வூரில் கோயில் கட்டி இச்சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். நூறு ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் இன்றும் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிலை அமைப்பு

மூன்று அடி உயரத்தில் ஐந்து கரங்களுடன் இடது காலை மடக்கி அமர்ந்த நிலையில் உள்ளார் விநாயகர். அவரின் இடது பின் கையில் பாசக்கயிறும் வலது பின் கையில் அங்குசமும் உள்ளன. வலது முன்கையில் ஒடிந்த தந்தமும், இடது முன் கை, துதிக்கையை பிடித்தவாறும் உள்ளது. பிற்காலச் சோழர்களின் சிற்பக்கலை அமைப்பில் இச்சிலை அமைந்துள்ளது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்