ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2014-15 ஆம் ஆண்டிற்கான இடைக்கால ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் நலனுக்காக நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் பல கோரிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 65 புதிய தொடர்வண்டிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் 9 தொடர்வண்டிகள் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளன.

100 கி.மீ தொலைவுக்கும் குறைவாக இயக்கப்படும் மயிலாடுதுறை - மன்னார்குடி, திருச்செந்தூர் - திருநெல்வேலி ஆகிய பயணியர் வண்டிகளை தவிர்த்துப் பார்த்தால் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள தொடர்வண்டிகளின் எண்ணிக்கை வெறும் 7 மட்டுமே. இவற்றில் முழுக்க முழுக்க தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், தமிழகத்திற்குள்ளேயே இயங்கும் வகையில் ஒரு ரயில் கூட அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மொத்தம் 14 ரயில்கள் கிடைத்த நிலையில் இப்போது தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு புதிய ரயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் தஞ்சாவூர்-அரியலூர் பாதை, சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை ரயில் பாதை ஆகியவற்றுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் வெற்றிகரமாக முடிவடைந்து, தொடக்ககட்ட பணிகளுக்காக கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், அவற்றை செயல்படுத்துவது குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

கடந்த ஆண்டில் ஜனவரி, அக்டோபர் ஆகிய மாதங்களில் இரண்டு முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் உயர்த்தப்படாததில் வியப்பேதும் இல்லை. ஆனால், தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய ரயில் கட்டண நிர்ணய ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி எந்த நேரமும் ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

பிரீமியம் ரயில்கள் என்ற பெயரில் 17 புதிய ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கொல்லைப்புற வழியாக ரயில்கட்டணத்தை உயர்த்தும் செயல் ஆகும். இந்த வகை ரயில்களில் பயண தேதிக்கு சில நாட்கள் முன்பாக முன்பதிவு தொடங்கும். அதேநேரத்தில் வழக்கமான கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக டெல்லி - மும்பை மார்க்கத்தில் இயக்கப்பட்ட பிரிமியம் ரயில்களில் மூன்றடுக்கு ஏ.சி. வகுப்பு பயணச் சீட்டுக் கட்டணம் ரூ.12,000 வரையும், இரண்டடுக்கு ஏ.சி. வகுப்பு பயணச் சீட்டுக் கட்டணம் ரூ.17,000 வரையும் உயர்த்தி விற்கப்பட்டதிலிருந்தே பிரிமியம் ரயில்கள் ஏழைகளுக்கு எட்டாதவையாக இருக்கும் என்பதை உணர முடியும்.

கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிடுபவர்களின் நலனுக்காகவும், வழக்கமான ரயில்களில் இடம் கிடைக்காதவர்களின் நலனுக்காகவும் இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அதிக ரயில்களை இயக்க வேண்டியது ரயில்வேத் துறையின் கடமையாகும். மாறாக, பயணிகள் நெரிசலை பயன்படுத்தி கட்டணத்தை உயர்த்துவது பச்சையான வணிக நோக்கம் கொண்ட செயலாகவே பார்க்கப்படும். எனவே, பிரிமியம் ரயில்களாக அறிவிக்கப்பட்டவற்றை சாதாரண கட்டண ரயில்களாக மாற்றியமைக்க வேண்டும்.

தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால், அவை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. ரயில்வே அமைச்சர்களாக லாலு பிரசாத் யாதவும்,பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரங்க.வேலுவும் இருந்த போது ரயில்வேத் துறையிடம் ஒரு லட்சம் கோடி ரூபாய் உபரி நிதி இருந்தது. ஆனால், இப்போது திட்டங்களுக்கு ஒதுக்குவதற்கு கூட நிதி இல்லாத நிலை ஏற்படுத்தப் பட்டிருப்பது தான் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே அமைச்சகம் படைத்துள்ள சாதனையாகும்.

அதேநேரத்தில் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் வரவேற்கப்பட வேண்டிய சில அம்சங்களும் உள்ளன. ஆந்திர மாநிலம் நகரி - திண்டிவனம் இடையிலான ரயில்பாதையை புதுச்சேரி வரை நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும், சேலம் - ஓமலூர் இடையே இரட்டை பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கப்பட வேண்டியவை ஆகும்.

பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும், வசதிகளுக்காகவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டியவையாகும். மொத்தத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியும், நிறைய ஏமாற்றமும் கொண்டதாக 2014-15 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்