தமிழகத்தில் தரமான சத்துணவின்றி எய்ட்ஸ் நோயாளிகள் அவதி

By ந.வினோத் குமார்

எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்து மாவு போன்ற உணவு வகைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு, ரேஷன் கடைகளில் அவர்களுக்கு சலுகை அடிப்படையில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதை பெறும்போது தங்களை ஏளனமாக பார்ப்பதால், எய்ட்ஸ் சிகிச்சை மையங்களில் தரமான சத்துணவு வழங்கும் திட்டத்தினை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

தமிழகத்தில் அரசு தரப்பில் தற்போது 49 ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் இலவச கூட்டுமருந்து சிகிச்சை மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் மருந்துடன் சத்து மாவு போன்றவையும் சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தரம் சரியாக இல்லை என்று சொல்லி எய்ட்ஸ் உள்ளோர் அதைப் பெற்றுக்கொள்ள மறுக்க, காலப்போக்கில் சத்துமாவு வழங்குவது நிறுத்தப்பட்டது.

அதற்குப் பதிலாக நலத்திட்டங்களை அரசு கொண்டு வந்தது. ஆனாலும் அவை பல்வேறு மாவட்டங்களில் உள்ள எய்ட்ஸ் உடன் வாழும் நபர்களைச் சென்றடையவில்லை.

இந்நிலையில், சமீப காலங்களில் உயர்ந்து வரும் விலைவாசியால், எய்ட்ஸ் நோயாளிகளில் கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளோர் ஆகியோரால் சத்தான உணவுகளை வெளிச்சந்தையில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எய்ட்ஸுக்கான சிகிச்சையை முறைப்படி பெற்று வந்தாலும், சரியான சத்துணவு இல்லாததால் சிகிச்சை பயனின்றிப் போகும் அபாயமும் உள்ளது.

இதுகுறித்து 'பாசிட்டிவ் பெண்கள் கூட்டமைப்பை' சேர்ந்த சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறும்போது, “சரியான அளவு சத்துணவு இல்லாததால் கூட்டுமருந்து சிகிச்சை எடுத்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதில்லை. மேலும், சரியான அளவு சத்துணவு இல்லாமல் 'இரண்டாம் நிலை' சிகிச்சைக்குத் தேர்வாகும் போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு இன்னும் அதிகம் செலவு செய்ய வேண்டி வரும்” என்றார்.

மேலும், “உழவர் அட்டை வைத்திருக்கும் எய்ட்ஸ் உள்ளோருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டாலும் தேவையான அளவுக்கு சத்துணவுகளை வாங்க முடிவதில்லை. மேலும், 'அந்தியோதயா அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. எனினும், அரிசி மட்டுமே சத்துணவு ஆவதில்லை. அதனுடன் சேர்த்து பருப்பு வகைகள், தானிய வகைகள் போன்றவற்றையும் வழங்க வேண்டும். இவற்றை கூட்டு மருந்து சிகிச்சை மையங்களிலேயே வழங்கினால் ஏராளமானோர் பயனடைவர்” என்றும் கூறினார்.

தமிழ்நாடு மாநில பாசிட்டிவ் பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் பத்மாவதி கூறும்போது, “நியாயவிலைக் கடைகளில் எய்ட்ஸ் உள்ளோர்க்கு முன்னுரிமை தரப்படும்போது, அவர்களைப் பற்றிய ரகசியம் வெளியாகி, சமூகம் ஒதுக்கி வைப்பதால், ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்க அவர்கள் முன் வருவதில்லை. “ என்றார்.

முன்பெல்லாம் ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் உள்ளோர்க்கு என தனியான சமூக நலக் கூடங்கள் செயல்பட்டு வந்தன. அவற்றில் சத்துணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவற்றையும் தற்போது மூடிவிட்டதால் ஏராளமான எய்ட்ஸ் உள்ள நபர்கள் பாதிப்படைகிறார்கள். தற்போது உள்ள நலத்திட்டங்களைக்கூட‌ பெற முடியாமல் அவதிப்படுகிற எய்ட்ஸ் உள்ளோர் அதிகமாக இருக்கிறார்கள். எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பலரின் வேண்டுகோள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்