'எங்களுடைய மகன்’ என்று மேலூர் தம்பதி உரிமை கோரிய வழக்கு
நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று மதுரை மாவட்டம், மேலூர் தம்பதி தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்காக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனுஷ் நேரில் ஆஜரானார். அவரது உடலில் உள்ள அங்க அடையாளங்களை நீதிமன்ற பதிவாளர்கள் முன்னிலையில் அரசு மருத்துவர்கள் சரிபார்த்து அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை நாளை நடக்கிறது.
மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த தம்பதியர் கதிரேசன்(60) - மீனாட்சி (55). நடிகர் தனுஷ்தான் தங்களது மூத்த மகன் கலைச்செல்வன் என்று கடந்த பல ஆண்டுகளாக இவர்கள் கூறிவருகின்றனர். கவனிக்க ஆளில்லாததால் வயதான நிலையில் தாங்கள் கஷ்டப்படுவதாகவும், பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் வழங்க நடிகர் தனுஷுக்கு உத்தரவிடக் கோரியும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கதிரேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனுஷ் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், ‘கலைச்செல்வன்’ என்ற பெயரில் உள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழை கதிரேசன் தரப்பு தாக்கல் செய்தது. அதில், அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதேபோல, தனுஷ் தரப்பில், ‘வெங்கடேஷ்’ என்ற பெயரிலான பள்ளி மாற்றுச் சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது. தன் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு என்றும், இதை தனுஷ் என மாற்றிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை.
இதையடுத்து, கதிரேசன் தாக்கல் செய்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் இருக்கிறதா என்பதை சரிபார்ப்பதற்காக தனுஷ் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகர் தனுஷ், இயக்குநர் கஸ்தூரிராஜா, அவரது மனைவி விஜயலெட்சுமி ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந் தனர். நீதிபதி முன்பு தனுஷ் மட்டும் ஆஜரானார்.
சில நிமிடங்கள் விசாரணை நடந்தது. பின்னர், உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜுடீசியல்) முன்னிலையில், தனுஷின் அங்க அடையாளங்களை அரசு மருத்துவர்கள் சரிபார்த்து, மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இறுதி விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நீதிமன்ற அறையின் பின்வாசல் வழியாக உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் உள்ள பதிவாளர் இளங்கோவன் அறைக்கு தனுஷ் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பதிவாளர்கள் இளங்கோவன், உமா முன் னிலையில் மதுரை அரசு மருத்துவமனை டீன் எம்.ஆர்.வைரமுத்துராஜா, உதவி முதல்வர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் தனுஷின் அங்க அடையாளங்களை சரி பார்த்து, அறிக்கை தயாரித்து, நீதி மன்றத்தில் தாக்கல் செய்தனர்.
தனுஷ் வழக்கு விசாரணை காரணமாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிஐஎஸ்எப் பாதுகாப்பு வளையப் பகுதி அருகே தனுஷ் காரில் வந்திறங்கியதும், அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்களும் பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர். நீதிமன்றத்துக்கு உள்ளேயும், நீதிமன்றக் கட்டிடத்திலும் வழக்கறிஞர்கள், ஊழியர்களும் கூடியிருந்தனர். இதனால் நீதிமன்ற நுழைவுவாயில் பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
ஏற்கெனவே பூட்டாமல் இருந்த பெரிய கேட், கூட்டத்தினரின் தள்ளு முள்ளு காரணமாக தானாக திறந்து கொண்டது. நெரிசலில் தனுஷ் சிக்கிக் கொண்டதால், அடையாள அட்டை சரிபார்க்கப்படாமலேயே காந்தி சிலை வரை சென்றுவிட்டார். பின்னர் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகு தனுஷ் நீதி மன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, சிஐஎஸ்எப் வீரர்கள் மனிதசங்கிலி போல கைகோத்து, தனுஷை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.
கதிரேசனை தவிர்த்த தனுஷ்
நீதிமன்ற அறையில் தனுஷ், விஜயலெட்சுமி, கஸ்தூரிராஜா ஆகியோர் ஒரே பெஞ்ச்சில் அமர்ந்திருந்தனர். தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரும் கதிரேசன் மீனாட்சி தம்பதியும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். அருகே இருந்த மற்றொரு பெஞ்ச்சில் அவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் தனுஷ் அருகில் வந்து பார்க்கவோ, பேசவோ முயற்சிக்கவில்லை. அமைதியாக உட்கார்ந்தபடியே தனுஷை அவ்வப்போது எட்டி எட்டி பார்த்துக்கொண்டே இருந்தனர். ஆனால், விஜயலெட்சுமியின் தோளில் கைபோட்டு அமர்ந்திருந்த தனுஷ், ஒருமுறைகூட கதிரேசன் தம்பதி இருந்த இடம் நோக்கித் திரும்பவில்லை.
பெற்றோருடன் நடிகர் தனுஷ்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago