ரா தகவலால் பிடிபட்ட அமெரிக்கக் கப்பல்: திடீரென வெளியாகிய புதிய தகவல்கள்
இந்தியக் கடல் பகுதிக்குள் நுழைந்த 'சீ மேன் கார்டு ஓகியோ' என்ற ரோந்துக் கப்பலை தூத்துக்குடி அருகே இந்தியக் கடலோரக் காவல் படையினர் கடந்த 12 ம் தேதி பிடித்தனர்.
அந்தக் கப்பல் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'அட்வன் போர்ட்' என்ற தனியார் மெரைன் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமானது என விசாரணையில் தெரியவந்தது. அந்தக் கப்பலை தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். அதில் இருந்த 10 மாலுமிகள் கைது செய்யப்பட்டனர்.
கைதான மாலுமிகளில் 8 பேர் இந்தியர்கள். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர்கள் தற்போது, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா', முன்கூட்டியே அமெரிக்க கப்பல் வருகை குறித்து கொடுத்த தகவலை வைத்துதான் தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் சீமேன் கார்டு கப்பலை பிடித்துள்ளனர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்தியாவின் ரிசர்ச் அண்டு அனலைஸ் விங்க் (ரா) அமைப்பின் வெளிநாட்டு உளவுப் பிரிவுக்கு, அமெரிக்கக் கப்பல் தமிழக கடல் பகுதிக்கு வருவது குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரா தெரிவித்துள்ளது.
அமைச்சக அதிகாரிகள் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு தகவல் தந்ததைத் தொடர்ந்து ஐ.சி.ஜி.எஸ். நாய்கிதேவி என்ற கடலோரக் காவல் படைக் கப்பல், சர்வதேச கடல் எல்லை அருகே இந்திய கடல் எல்லைக்குள் 10.75 நாட்டிகல் மைல் தூரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. ரா கூறியதுபோலவே அமெரிக்க கப்பல் வந்ததால், அதைச் சுற்றிவளைத்துப் பிடித்தது இந்திய கப்பல். இந்தத் தகவல் இப்போதுதான் தெரியவந்துள்ளது.
கப்பல் கழகம் கடிதம்...
தூத்துக்குடியில் பிடிபட்டது அமெரிக்க நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலாக இருந்தாலும், ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள சியாரா லியோன் என்ற நாட்டில் உள்ள சர்வதேசக் கப்பல் பதிவுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சியாரா லியோன் சர்வதேச கப்பல் பதிவுக் கழகம், இந்தியக் கடலோரக் காவல் படைக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. அதில், 'அமெரிக்கக் கப்பலை சட்டவிரோதமாக இந்தியா பிடித்து வைத்திருக்கிறது. கப்பலையும், அதில் இருந்தவர்களையும் உடனே விடுவிக்க வேண்டும். புழல் சிறையில் இருக்கும் கப்பல் ஊழியர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை. சரியான வசதிகள் செய்து கொடுக்கவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.