ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் மனு ஏற்பு: சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் புலன் விசாரணை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தற்போது வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது வழக்கறிஞர்கள் தடா என்.சந்திரசேகரன், எஸ்.ரூபன் மூலம் தடா வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் பேரறிவாளன் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைக்கு சதித் திட்டம் தீட்டிய நபர்கள் குறித்து கண்டறிய வேண்டும் என்ற ஜெயின் கமிஷன் பரிந்துரைப்படி சி.பி.ஐ. (எம்.டி.எம்.ஏ.) புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய புலன் விசாரணை தவிர, இந்த சி.பி.ஐ. (எம்.டி.எம்.ஏ.) புலன் விசாரணை கூடுதலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஏற்கெனவே நடைபெற்ற சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை, மற்றும் தற்போது நடைபெற்று வரும் சி.பி.ஐ. (எம்.டி.எம்.ஏ.) புலன் விசாரணை ஆகியவற்றின் வழக்கு டைரி மற்றும் சி.பி.ஐ. (எம்.டி.எம்.ஏ.) 161 பேரிடம் பதிவு செய்த வாக்குமூலம் போன்றவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று பேரறிவாளன் தனது மனுவில் கோரியுள்ளார்.

மேலும், சி.பி.ஐ. (எம்.டி.எம்.ஏ.) நடத்தும் புலன் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு சென்னையில் உள்ள தடா வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி என்.தண்டபாணி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE