வரலாற்றில் கண்டிராத வறட்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. பெரும்பாலான நீர்நிலைகள் காய்ந்து கிடப்பதுடன், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. எனினும், தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், ஆழ்குழாய்க் கிணறுகளையே பெரிதும் நம்பியுள்ளன. இதனால், பல இடங்களில் புதிதாக ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்படுகின்றன.
நிலத்தடி நீர்மட்டம் 1,200 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால், சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.மணிராஜ் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் சிறு, குறு பம்ப்செட் நிறுவனங்களும், அதைச் சார்ந்து 15 ஆயிரம் நிறுவனங்களும் செயல்படுகின்றன. நேரடியாக 1.50 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக ஒரு லட்சம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த நிறுவனங்களில் ஒரு ஹெச்.பி. முதல் 20 ஹெச்.பி. திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட பம்ப்செட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் 70 சதவீதத்துக்கும் மேல் விவசாயம் மற்றும் வீடுகளில் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
சிறு, குறு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மோட்டார் பம்ப்செட்களால் சுமார் 700 அடி வரை மட்டுமே தண்ணீரை உறிஞ்ச முடியும். ஆனால், தற்போது பல்வேறு மாவட்டங்களில் 1,000 அடி முதல் 1,200 அடிக்கும் கீழே நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டது. இதனால் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் பம்ப்செட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
பெரிய நிறுவனங்கள் 50 ஹெச்.பி. வரை திறனுள்ள மோட்டார் பம்ப்செட்களைப் பயன்படுத்துவதால், 1,200 அடிக்கும் கீழே தண்ணீர் இருந்தாலும், உறிஞ்சுகின்றன. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளையே நாடுகின்றனர். இதனால், சில நிறுவனங்களே பயனடைகின்றன. அதுமட்டுமின்றி, அவை நிர்ணயிப்பதே விலை என்பதால், நுகர்வோர் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. மேலும், சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்களுக்கு பணி கிடைப்பது மிகவும் குறைந்துவிட்டது. இதனால் 40 சதவீதம் வரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமானால், பெரும்பாலான சிறு, குறு பம்ப்செட் நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.
பொதுவாக, நவம்பர் 15-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை மட்டுமே இந்த தொழிலுக்கு சீஸன் இருக்கும். வடகிழக்குப் பருவமழை தொடங்கும்போது மோட்டார் பம்ப்செட் தேவை மிகவும் குறைந்துவிடும். ஆனால், தற்போது சீஸன் நேரத்திலேயே நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், குறைந்த சக்தியிலான மோட்டார் பம்ப்செட்களின் தேவையும் குறைந்துவிட்டது. இதனால் பல நிறுனங்களில் உற்பத்தி பெரிதும் குறைந்துவிட்டது.
கோவையைப் பொருத்தவரை ஜவுளித் தொழில் ஏற்கெனவே முடங்கியுள்ள நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங்களே வேலைவாய்ப்பை வழங்குவதாக உள்ளன. இந்நிலையில், சிறு, குறு நிறுவனங்களுக்கு நெருக்கடி அதிகரிப்பது, தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. எனவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago