உண்ணாவிரதம் இருந்ததால்தான் ஆட்சியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்: ஆளுங்கட்சி எம்எல்ஏ குணசேகரன்

By க.சே.ரமணி பிரபா தேவி

ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துகொண்டே, குவாரிகளுக்கு எதிரான போராட்டம், மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் என பரபரக்க வைக்கிறார் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன். மறுபக்கம் பொதுமக்கள் எம்எல்ஏ விளம்பரத்துக்காக அரசியல் செய்கிறார் என்று கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், 'தி இந்து' தமிழ் இணையதளப் பிரிவுக்காக குணசேகரன் அளித்த சிறப்புப் பேட்டி.

எதற்காக இந்த உண்ணாவிரதம்?

செயல்பட மறுத்து சாக்குப்போக்கு சொல்லும் அரசு அதிகாரிகளைச் செயல்பட வைக்கத்தான். பள்ளி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றச் சொன்னேன். அதற்கு தேர்வுகள் இருக்கின்றன என்று கூறிக்கூறியே, உரிய நடவடிக்கை எடுக்காமல் முதன்மைக் கல்வி அலுவலர் தாமதப்படுத்தினார். புதிய மதுக்கடைகளை 4 இடங்களில் திறக்க அதிகாரிகள் முயன்றனர்.

பொதுமக்கள் நிதி தரத் தயாராக இருந்தும், கோவிலொன்றுக்கு ராஜ கோபுரம் அமைக்க அனுமதியளிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்தனர். இதுபோன்று இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த உங்களால் அரசை அணுக இயலவில்லையா?

தேவையான உதவியைச் செய்ய அமைச்சர்கள் தயாராக இருந்தாலும், அரசு அதிகாரிகள் தாமதப்படுத்துகிறார்கள். ஆட்சியும் காட்சிகளும் மாறிகொண்டே இருக்கின்றன. ஆனால் அரசு அதிகாரிகள் அப்படியேதான் இருக்கிறார்கள்.

இதனால் உங்கள் மேலிடத்தில் இருந்து அழுத்தம் எதுவும் இல்லையா?

அங்கே அழுத்தம் இருக்கும் என்பது உண்மைதான். மக்கள் நலத் திட்டங்களுக்காக அவர்களிடமே வாதாடுவேன். மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவே நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.

ஒன்றரை மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டீர்களே?

திருப்பூர் ஆட்சியரும், சார்பு ஆட்சியரும் உண்ணாவிரதப் பந்தலுக்கே வந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர். அதனாலேயே உண்ணாவிரதத்தை உடனே முடித்துக் கொண்டேன்.

உங்களின் உண்ணாவிரதம் அடையாள உண்ணாவிரதம் என்று விமர்சிக்கப்படுகிறதே?

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் இருக்கும்வரை யார் வேண்டுமானாலும் கருத்து கூறுவார்கள். அது உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஓபிஎஸ்-க்குக் கூடத்தான் ஆதரவு என்றார்கள். உண்மையிலே இருக்கிறதா என்ன?

உணர்வுபூர்வமாக மக்களை தூண்டிவிட்டால், அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்.

மதுக்கடைகளுக்கு எதிரான திருப்பூர் மக்களின் போராட்டத்துக்கு நீங்கள் ஆதரவளிக்கவில்லையே?

எதுவானாலும் தனியாகப் போராடவேண்டும் என்று எண்ணுபவன் நான். மக்கள் போராட்டங்களுக்கு நான் செல்வதில்லை. அங்கே மக்களும் இருப்பார்கள். எதிர்க் கட்சிகளும் இருப்பார்கள். யாராவது கல்லைத் தூக்கி எறிந்துவிட்டு, எம்எல்ஏதான் செய்யச் சொன்னார் என்பார்கள்.

மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈஸ்வரி என்ற பெண், ஏடிஎஸ்பியால் தாக்கப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டின் போதும் காவல்துறையினர் வன்முறையை அவிழ்த்துவிட்டனர். இந்தப் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

மக்களோடு சமூக விரோதிகளும் கலந்து போராட்டத்தில் ஈடுபடுவதால், காவல்துறையின் கட்டுப்பாடுகள் அவசியம்தான். அதே நேரத்தில் கொடூரத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE